ரூ.5 லட்சம் கையாடல்: மனமுடைந்த இளைஞர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு


சித்தரிப்புப் படம்.

தாம்பரம்: ரூ. 5 லட்சம் கையாடல் செய்த இளைஞரை தாய், அண்ணன், போலீஸார் கண்டித்ததால் மனம் உடைந்த நிலையில் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தாம்பரம் அடுத்த இரும்புலியூர், பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் உதயகுமார்(29). இவர் சிட்லபாக்கத்தில் உள்ள மிலிட்டரி கேண்டினில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், தான் பணிபுரிந்து வந்த நிறுவனத்தில் சிறிது சிறிதாக சுமார் ரூ.5 லட்சத்து 39 ஆயிரம் உதயகுமார் பணத்தைத் திருடியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் சார்பில் சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் உதயகுமார் மீது புகார் அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் கடந்த 7ம் தேதி போலீஸார் உதயகுமாரை விசாரணைக்கு அழைத்து விசாரித்த போது தந்தையின் மருத்துவ செலவுக்காக பணத்தை எடுத்து செலவு செய்ததாக கூறினார். மேலும், இரண்டு நாட்களில் பணத்தை கொடுக்க வில்லை எனில் சிறை செல்ல நேரிடும் என போலீஸார் எச்சரித்தனர்.

இதனிடையே, உதயகுமார் பணம் திருடிய விபரம் அவரது தாய் மற்றும் அண்ணனுக்கு தெரிய வந்தது. அவர்கள் இருவரும் உதயகுமாரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த உதயகுமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாத்ரூம் கழுவ பயன்படுத்தும் பினாயிலை எடுத்து குடித்து உயிருக்கு போராடினார்.

பின்னர் அவராகவே 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து வரவழைத்து சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். இது குறித்து தாம்பரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணம் திருடியதை தாயும், சகோதரனும் கண்டித்ததால் மனம் உடைந்த வாலிபர் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 - 24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.

x