தமிழ் யூடியூப் சேனலில் உலகில் 42 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்ஸ் கொண்டவர் பிரபலமான டிடிஎஃப் வாசன். பைக் சாகசம் செய்து வீடியோ வெளியிட்டு, 2கே கிட்ஸ்களின் ஆதர்ச நாயகனாக வலம் வருபவர். அந்த தன்னம்பிக்கையில் 'மஞ்சள் வீரன்' என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.
இந்த சூழலில் தான் அதிவேகமாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் கடந்த செப்டம்பர் 19-ம் தேதி இவர் கைது செய்யப்பட்டார். சென்னையில் இருந்து கோவை செல்லும்போது பாலுசெட்டி சத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த டிடிஎஃப் வாசன், வீலிங் செய்ய முயன்று விபத்தில் சிக்கினார்.
இதில் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதிவேகமாக சென்று விபத்தை ஏற்படுத்தியதாக டிடிஎஃப் வாசனை கைது செய்த போலீஸார், வழக்குப்பதிவு செய்தனர். 10 ஆண்டுகளுக்கு அவரது லைசென்ஸையும் ரத்து செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார், இதைத்தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார் டிடிஎஃப் வாசன்.
விளம்பரத்துக்காகவும், மற்ற இளைஞர்களைத் தூண்டும் வகையிலும் செயல்பட்டுள்ள மனுதாரரின் செயல், மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். அவர் தொடர்ந்து நீதிமன்ற காவலிலேயே நீடிக்கட்டும் எனக் கூறி ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், அவரது யூடியூப் தளத்தை மூடிவிட்டு பைக்கை எரித்து விடலாம் என கருத்து தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, இரண்டாவது முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, வாசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அவரால் வாகனம் ஓட்ட முடியாது. மேலும், 40 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து, கடந்த நவம்பர் 1-ம் தேதி மூன்று வாரங்களுக்கு தினமும் பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தநிலையில் காவல்துறை சார்பில் டிடிஎஃப் வாசன் யூடியூஒ சேனலை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக நீதிமன்றத்திடம் காவல்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. குறிப்பாக, யூடியூப் சேனல் முடக்கப்பட வேண்டும். இதன் மூலம் பல இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்கின்றனர் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் தற்போது அவரது யூடியூப் சேனலை முடக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. காவல்துறையினர் அவரது யூடியூப் சேனலை முடக்க நடவடிக்கை எடுத்திருப்பது பொதுமக்கள் இடையே பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள டிடிஎஃப் வாசன், தனது யூடியூப் சேனலை முடக்க பார்க்கிறார்கள். அது கடுமையான மனவேதனை அளிப்பதாக கூறியுள்ளார். மேலும், இந்த சேனலை முடக்கினால் என்ன, புதிய சேனலைத் தொடங்கியுள்ளேன் எனக் கூறினார்.
அதாவது இம்மோர்டல் டிடிஎஃப் வாசன் என்ற பெயரில் அந்த சேனல் துவங்கப்பட்டுள்ளது. அந்த சேனலின் டேக் லைனாக, 'வீழ்ந்தாலும் விண்ணைத் தொடுவோம்' என வைக்கப்பட்டுள்ளது. தொடங்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளேயே அந்த சேனலுக்கு 1 லட்சத்து 74 ஆயிரம் சப்ஸ்கிரைபர்ஸ் கிடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனது இரு சக்கர வாகனத்தை தன்னிடம் காவல் துறையினர் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி டிடிஎஃப் வாசன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு வருகின்ற 29-ம் தேதிக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...