உலகக்கோப்பையில் இந்தியா தோல்வி... அதிர்ச்சியில் 32 வயது சாஃப்ட்வேர் இன்ஜினீயர் மாரடைப்பால் மரணம்!


ஜோதி குமார் யாதவ்

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் அதிர்ச்சி அடைந்த திருப்பதியை சேர்ந்த 32 வயதான சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஜோதி குமார் யாதவ் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

நேற்று நடைபெற்ற இந்த உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதின. பலம் வாய்ந்த இரு அணிகள் இறுதிப்போட்டியில் மல்லு கட்டியதால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே இந்த போட்டியை உன்னிப்பாக கவனித்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கே.எல். ராகுல் 66 ரன்களும், விராட் கோலி 54 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா ஆடியது. ஆரம்பத்தில் 3 விக்கெட்டை பறிகொடுத்தாலும் அதன்பின்னர் அதிரடியாக ஆடி அந்த அணி வெற்றி பெற்றது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடர் வெற்றிகளை பெற்று வந்த நிலையில், இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வியால் கிரிக்கெட் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி இறுத்திப்போட்டியில் வெற்றி பெறாதது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எப்படியும் இந்தியா இந்த முறை கோப்பையை வென்றுவிடும் என்றே நினைத்த பல ரசிகர்களுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் ரசிகர்கள் பலரும் கண்ணீர் விட்டு அழுததையும் காணமுடிந்தது.

இந்த நிலையில், திருப்பதியில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியில், 32 -வயதே ஆன இன்ஜினீயர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

ஜோதி குமார் என்ற அந்த நபரின் தந்தை திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். திருப்பதியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்த ஜோதி குமார், கிரிக்கெட்டின் தீவிர ரசிகராம். நேற்றைய போட்டியில் இந்திய அணி எப்படியும் வெற்றி பெற்று விடும் என்று நினைத்திருந்த ஜோதிகுமாருக்கு ஆஸ்திரேலிய அணியின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியவில்லையாம்.

இதனால் அதிர்ச்சியில் இருந்த ஜோதிகுமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவரது உறவினர்கள் கூறுகையில், "மாரடைப்பு ஏற்பட்டதும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். ஆனால், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விரைவில் அவருக்கு திருமணம் நடத்த திட்டமிட்டு இருந்தோம்" என்று கண்ணீருடன் கூறினார். கிரிக்கெட் தோல்வியால் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


x