தருமபுரியில் அதிர்ச்சி! புகார் கொடுக்க வந்த சிறுமியை சீரழித்த உதவி ஆய்வாளர் கைது


உதவி ஆய்வாளர் சகாதேவன்

தருமபுரி அருகே குடும்பத் தகராறு தொடர்பாக காவல்நிலையத்தில் புகாரளிக்க வந்த 2 குழந்தைகளுக்கு தாயான 17 வயது சிறுமியை மிரட்டி, காவல் ஆய்வாளர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் ஓசூரைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. குழந்தை திருமணமான இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் யாரும் வெளியில் சொல்லவில்லை.

இந்நிலையில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு, சிறுமிக்கும் அவரது மாமியாருக்கும் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, ஏரியூர் காவல் நிலையத்தில் சிறுமி புகார் அளித்துள்ளார். அதில் ஏரியூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சகாதேவன் (55), விசாரணை அதிகாரியாக செயல்பட்டுள்ளார்.

ஏரியூர் காவல் நிலையம்

விசாரணையின் போது சிறுமியின் தொலைபேசி எண்ணை பெற்றுக் கொண்ட சகாதேவன், முதலில் மிரட்டியும், பின்பு அதையே காரணம் காட்டியும், சிறுமியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

இந்தப் பாலியல் தொடர்பு குறித்து சிறுமியின் கணவருக்கு தெரிந்ததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தன்னை கணவர் கொடுமைப்படுத்துவதாக ஹெல்ப்லைனுக்கு சிறுமி புகார் தெரிவித்ததை தொடர்ந்து, அதிகாரிகள் அவரை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.

ஏரியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சகாதேவன்

இதனிடையே சிறுமியின் கணவனின் மீது சகாதேவன் வழிகாட்டுதலின்படி, குழந்தை திருமணம் என புகாரளிக்கப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே காப்பகத்தில் இருந்த குழந்தைகள் நல உறுப்பினரிடம், சிறுமி தனக்கு உதவி காவல் ஆய்வாளரால் ஏற்பட்ட பாலியல் கொடுமைகள் குறித்து கூறியுள்ளார். இதனை தொடர்ந்து குழந்தைகள் நல உறுப்பினர்கள் பென்னாகரம் நீதிமன்றத்தை நாடி உள்ளனர்.

தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலையம்

பென்னாகரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சிறுமி, நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சகாதேவனை ஏரியூர் போலீஸார் மற்றும் பென்னாகரம் மகளிர் போலீஸார் இன்று கைது செய்தனர். வேலியே பயிரை மேய்ந்த கதையாக, புகாரளிக்க சென்ற இடத்தில் சிறுமியை உதவி ஆய்வாளர் சீரழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

HBD Shalini Ajith | அஜித் காட்டிய அக்கறை... வாழ்க்கையை ‘அமர்க்களமாய்’ மாற்றிய சினிமா!

x