ஒரே இடத்தில் சிக்னல்... சந்தேகத்தால் சென்ற வனத்துறையினர்! மக்னா யானை உயிரிழந்ததால் அதிர்ச்சி


மக்னா யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட நாகமலை பகுதியில் மக்னா யானை உயிரிழந்த சம்பவம் வனத்துறையினர் மற்றும் வன ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் மக்னா யானை ஒன்று குடியிருப்பு பகுதிகளின் அருகில் சுற்றி திரிந்தது. அடிக்கடி விவசாய நிலங்களுக்குள் புகுந்து வேளாண் பயிர்களை யானை சேதப்படுத்தி வந்ததால் அதனை பிடித்து வேறு பகுதியில்விட வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதன் பேரில் தமிழ்நாடு வனத்துறையினர் அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள டாப்ஸ்லிப் வனப்பகுதியில் விடுவித்தனர். ஆனால் சில தினங்களிலேயே டாப்ஸ்லிப் வனப்பகுதியை விட்டு வெளியேறிய மக்னா யானை நடுப்புனி வழியாக கோவை மாநகருக்குள் சென்று குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரிந்தது.

ரேடியோ காலர் பொருத்தப்பட்ட மக்னா யானை உயிரிழப்பு

இதையடுத்து 2வது முறையாக மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட மக்னா யானைக்கு ரேடியோ காலர் பொருத்தப்பட்டு அடர்ந்த வனப்பகுதியான வால்பாறை அடுத்து உள்ள மானாம்பள்ளி வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.

இந்நிலையில் ரேடியோ காலர் பழுதடைந்ததால், மக்னா யானை மீண்டும் வனப்பகுதியை விட்டு வெளியேறி, பொள்ளாச்சி அடுத்துள்ள சரளப்பதி பகுதியில் முகாமிட்டது. அங்கு விவசாய நிலங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் அந்த யானையை மீண்டும் பிடிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

மக்னா யானை பிடிக்கப்பட்ட போது

இதனால் மூன்றாவது முறையாக கடந்த ஜூலை 31ம் தேதி யானைக்கு மயக்கம் ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. மீண்டும் யானைக்கு ரேடியோ காலர் பொருத்தப்பட்டு வால்பாறை அருகே உள்ள சின்ன கல்லாறு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டிருந்தது.

இந்த யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், யானை சின்ன கல்லாறில் இருந்து இடம்பெயர்ந்து பொள்ளாச்சி அருகே உள்ள வில்லோனி வனப்பகுதியில் நாகமலை என்ற இடத்தின் அருகே சுற்றித்திரிந்தது. இந்நிலையில் யானையின் ரேடியோ காலரில் ஒரே இடத்தில் இருந்து சிக்னல்கள் வந்ததால் சந்தேகம் அடைந்த வனத்துறையினர் வனப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர்.

பொள்ளாச்சி அருகே நாகமலை வனப்பகுதி

அப்போது யானை அங்கு உயிரிழந்து கிடந்தது தெரிய வந்ததால் வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநரும் கோவை மண்டல தலைமை வன பாதுகாவலருமான ராமசுப்பிரமணியன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் யானை பாறையில் இருந்து வழுக்கி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் பிரேத பரிசோதனைக்கு பிறகே யானையின் உயிரிழப்பு குறித்து முழு தகவல்கள் தெரியவரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மக்னா யானையின் உயிரிழப்பு வனத்துறை மற்றும் வன ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

x