கோத்தகிரி: கோடநாடு வனத்தில் மரம் வெட்டிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏர்கன் துப்பாக்கி, தோட்டாக்கள், வெட்டுக்கத்தி, கைரம்பம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வனச்சரகம், ஈளாடா பிரிவு, கோடநாடு பீட்டிற்கு உட்பட்ட கர்சன்வேலி-1 காப்புக்காட்டில், கடந்த 5-ம் தேதி சிலர் அத்துமீறி உள்ளே நுழைந்து, கற்பூர மரங்களை வெட்டியதாகவும், ஏர்கன் துப்பாக்கி கொண்டு சென்று துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், கோத்தகிரி வனத்துறையினர் தகவல் கிடைத்தது. அதன் பேரில் வனத்துறையினர் புலன் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த விசாரணையில் குற்றத்தில் ஈடுபட்ட ஈளாடா கிராமம் பாரதிநகரை சேர்ந்த சசிகுமார் (39), அருண்செல்வன் (30), நாகராஜ் (34), கிருஷ்ணகுமார் (48), பிரகாஷ்குமார் (22) ஆகிய 5 நபர்கள் என தெரிய வந்தது. அவர்களை பிடித்து விசாரித்ததில், குற்றத்தில் ஈடுபட்டது உறுதியானது.
அதையடுத்து அவர்களிடமிருந்து ஏர்கன் துப்பாக்கி, அதற்கான தோட்டாக்கள், வெட்டுக்கத்தி, கைரம்பம் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் மீது வன உயிரின குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டு, ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் இன்று குன்னூர் நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டனர்.