அதிகாலையில் பரபரப்பு... சென்னை, ராமநாதபுரத்தில் என்ஐஏ அதிரடி சோதனை!


என்ஐஏ

தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா இயக்கத்திற்கு ஆட்கள் சேர்த்த வழக்கில் சென்னை மற்றும் ராமநாதபுரம் என ஐந்து இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை முத்தையால் பேட்டை பிடாரி யார் கோயில் தெருவில் உள்ள நபர் ஒருவரின் வீடு மற்றும் ராமநாதபுரத்தில் நான்கு நபர்களின் இடங்கள் என மொத்தம் ஐந்து இடங்களில் இன்று காலை முதல் பெங்களூரு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, கடந்த 2023-ம் ஆண்டு லஸ்கர் இ தொய்பா இயக்கத்திற்கு கைதிகளை தீவிரவாதிகளாக மாற்றியது தொடர்பான வழக்கில் இந்த சோதனையானது நிகழ்த்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் தண்டனை கைதியான பயங்கரவாதி நசீர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது அங்கு வரும் கைதிகளைப் பயங்கரவாதிகளாக மாற்ற மூளைச் சலவை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இப்படி மூளைச் சலவை செய்யப்பட்ட ஐந்து நபர்கள் வெளியே வந்த பிறகு சட்டவிரோத செயலில் ஈடுபட முயன்ற போது அவர்களிடம் கைத்துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் வெடி மருந்துகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு ஐந்து பேரை பெங்களூரு காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கானது 2023-ம் ஆண்டு பெங்களூரு தேசிய புலனாய்வு முகமை பிரிவிற்கு மாற்றப்பட்டு இவ் வழக்கு தொடர்பாக கடந்த 2023-ம் ஆண்டு என்ஐஏ அதிகாரிகள் கர்நாடக மாநிலம் பெங்களூர் முழுவதும் சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்கள் மற்றும் ரூ.7.50 லட்சம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்தது.

மேலும் இவ்வழக்கில் சிலர் தலைமறைவாக இருந்து வரும் நிலையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் துபாயிலிருந்து வந்த ஹவாலா பணம், சென்னையில் இருந்து வங்கி கணக்கு மூலமாக சிறையில் உள்ள நசீர் பயங்கரவாதிக்கு சென்று இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ஹவாலா பணப்பரிமாற்றம் அடிப்படையாக வைத்து சென்னை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இவர்களுக்குத் தடை செய்யப்பட்ட அமைப்பினருடன் தொடர்புள்ளதா என்பது தொடர்பாக சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும், சோதனை நிறைவுக்குப் பிறகு கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் ரொக்கம் தொடர்பான விவரங்கள் தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

x