சென்னை: சர்ச்சைக்குரிய ஆன்மிகப் பேச்சாளர் மகாவிஷ்ணுவை செப்டம்பர் 20 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
மாற்றுத் திறனாளிகள் குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் மகாவிஷ்ணுவை வரும் 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க சைதாபேட்டை நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து, புழல் சிறையில் மகாவிஷ்ணு அடைக்கப்பட்டார். முன்னதாக, அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியது கவனிக்கத்தக்கது.
ஆஸ்திரேலியாவில் இருந்து சனிக்கிழமை இன்று காலை சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை சந்திக்க பத்திரிக்கையாளர்கள் சென்னை விமான நிலையத்தில் காத்திருந்த நிலையில், பத்திரிக்கையாளர்களைச் சந்திக்க விடாமல், முன்னதாகவே விமான நிலையத்தின் உள்ளேயே சென்று போலீஸார் கைது செய்தனர்.
அதைத் தொடர்ந்து, மகாவிஷ்ணு மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 192, 196 (1) a, 352, 353 (2) மற்றும் மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப்பிரிவு 92 (a) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
இதனிடையே, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், “என்னைப் பொறுத்தவரை ஒரு பிரச்சினை வந்தால், உடனடியாக அந்த பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும். அந்த பிரச்சினைக்கு என்ன தீர்வோ, என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அந்த நடவடிக்கையை எடுத்துவிட்டேன். அதன்பிறகு, நான் எனது அடுத்த வேலையைப் பார்க்கச் சென்று விடுவேன். எனவே, அந்த விவகாரம், தற்போது காவல்துறை வசம் சென்றுள்ளது. காவல் துறையினர், அதற்கான நல்ல முடிவை எடுப்பார்கள்” என்றார்.
“என் மீது எந்த தவறும் இல்லை, அமைச்சர் என் மீது பழி சுமத்துகிறார்” என்று மகாவிஷ்ணு கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில், “இது தொடர்பாக மாற்றுத் திறனாளிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தங்களை மகாவிஷ்ணு அவமானப்படுத்திவிட்டதாக கூறி பெரிய புகாரை அளித்துள்ளனர். எனவே, இந்த பிரச்சினையை இனி காவல்துறையும், புகார்தாரர்களும் பார்த்துக்கொள்வார்கள். அவர் மீது தவறு உள்ளதா, இல்லையா என்பதில் சட்டம் தன் கடமையைச் செய்யும்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
புகார் என்ன? - ‘பரம்பொருள் ஃபவுண்டேஷனை சேர்ந்த மகாவிஷ்ணு என்பவர் சென்னை சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கடந்த 28-ம் தேதி நிகழ்த்திய சொற்பொழிவின்போது, மாற்றுத் திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ளார். எனவே, மாற்றுத் திறனாளிகளுக்கு எதிரான வன்கொடுமை சட்டப்படியும், ஊனமுற்றோர் உரிமைகள் சட்டப்படியும் மகாவிஷ்ணுவை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று அந்தப் புகாரில் கூறப்பட்டிருந்தது.