தேர்தல் களேபரங்கள்|பாஜக எம்.பி., யின் ஆபாச வீடியோ... ரவுண்ட் கட்டும் எதிர்கட்சிகள்!


பாஜக எம்பி உபேந்திர சிங் ராவத்தை வைத்து போலி ஆபாச வீடியோ

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எம்பி- உபேந்திர சிங் ராவத்தின் போலி ஆபாச வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ விவகாரம் எதிர்கட்சியின் சதி என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உத்தரபிரதேசத்தின் பாராபங்கி தொகுதி பாஜக எம்பி-யாக இருப்பவர் உபேந்திர சிங் ராவத். வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 195 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி சமீபத்தில் வெளியிட்டது. அதில், பாராபங்கி தொகுதியில் எம்பி- உபேந்திர சிங்குக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உபேந்திர சிங் ராவத்தின், தனி செயலாளர் தினேஷ் சந்திர ராவத், கோட்வாலி காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில், எம்பி- உபேந்திர சிங் ராவத் போன்று மார்ஃபிங் செய்யப்பட்ட ஆபாச வீடியோ சமூக வலைதளத்தில் பரப்பப்பட்டுள்ளதாகவும், தேர்தலில் அவருக்கு போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் அவரது நன்மதிப்பை கெடுக்கும் வகையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது எனவும், இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

உபேந்திர சிங் ராவத்

இந்நிலையில் புகார் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர் மீது எஃப். ஐ. ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எம்பி- உபேந்திர சிங் ராவத் கூறுகையில், “பாராபங்கி தொகுதியில் பாஜக என்னை வேட்பாளராக அறிவித்துள்ளதால் எனது எதிரிகள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். அந்த வீடியோ முற்றிலும் போலியானது. குற்றவாளிகள் விரைவில் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவார்கள்" என்றார்.

கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், அப்போதைய எம்பி- பிரியங்கா சிங் ராவத்துக்கு சீட் வழங்க மறுத்து, உபேந்திர சிங் ராவத்தை பாஜக வேட்பாளராக நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

x