கலவரம், கள்ளச்சாராயம், அடுத்து பாலியல் தொழில்... - குற்றங்களில் சிக்கித் தவிக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம்!


பிரதிநிதித்துவப் படம்

கள்ளக்குறிச்சி: கலவரம், கள்ளச்சாராயம் அடுத்து சட்டவிரோத பாலியல் தொழில் என குற்றச்சம்பவங்களுக்கு பெயர் போன மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாறி வருவதாக இம்மாவட்டத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கரும்பு விவசாயத்தில் முதன்மையாக விளங்கி வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், கடந்த சில ஆண்டுகளாக குற்றச் செயல்களின் புகலிடமாக மாறி வருகிறது.

கடந்த 2022-ம் ஆண்டு கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூர் ஊராட்சியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில், பிளஸ் டூ மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பள்ளியில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டு தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அப்போது இச்சம்பவம் தொடர்பாக சுமார் 300 பேர் வரை கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவம் நடைபெற்று 2 ஆண்டுகள் நிறைவு பெறுவதற்குள், கடந்த ஜூன் மாதம் 18-ம் தேதி கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தி 67 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தமிழக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதில் 26 பேர் வரை கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கையும் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, கள்ளக்குறிச்சி மாவட்டம், சில தினங்களுக்கு முன் உளுந்தூர்பேட்டையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர். பாலியல் வழக்கில் சிலரை கைது செய்வது சாதாரண ஒரு நிகழ்வு என்றாலும், இது இப்பகுதியில் தொடர்கதையாக நீள்வது தான் சர்ச்சையாகி இருக்கிறது.

அடுத்தடுத்த வந்த புகார்களின் அடிப்படையில், கடந்த ஒரு வாரத்தில் உளுந்தூர்பேட்டை சரகத்தில் 11 பேர் கண்டறியப்பட்டு, இதில் 6 பேர் கைதாகியுள்ளனர். சங்கராபுரம் சரகத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி சரகத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக, காவல்துறையின் உளவுத்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, “துணைக் கண்காணிப்பாளர் நிலையில் உள்ள காவல் அதிகாரியின் உடந்தையோடு திருக்கோவிலூரில் நடைபெற்று வந்த பாலியல் தொழில், அந்த அதிகாரி பணியிட மாற்றம் பெற்ற பின், அவர் பகுதிக்கே விபச்சாரத் தொழிலையும் இந்தக் கும்பல் மாற்றி விட்டது.

காவல் அதிகாரியின் துணையோடு நடைபெற்று வந்த பாலியல் தொழிலின் ரகசியத்தை அறிந்த ஆய்வாளர் ஒருவர், காவல் மேலதிகாரி வரை தகவலை கொண்டு சேர்த்ததால், முதலில் காவல் அதிகாரியை நாகை மாவட்டத்துக்கு மாற்றியுள்ளனர். அவ்வாறு பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவல் அதிகாரி நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

முதலில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த 4 பேரை கைது செய்து விசாரணை நடத்திய நிலையில், அவர்களிடம் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, போலீஸார் தீவிரவேட்டையில் இறங்கினர்.

அதன் நீட்சியாகத்தான் தற்போது 14 பேர் வரை கைது நடைபெற்றுள்ளது” என்று தெரிவிக்கின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிரடியால், அரசியல் பிரமுகர்களும் ஏதும் பேச முடியாமல் மவுனமாகியிருப்பதாக உளவுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர். இந்த பாலியல் தொழில் விவகாரத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்டகாவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதியிடம் கேட்டபோது, “மாவட்டத்தில் குற்றச்செயல்களை படிப்படியாக குறைத்து வருகிறோம். பாலியல் வழக்கில் தொடர்புடையவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டத்துக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்ட உளுந்தூர்பேட்டை முன்னாள் டிஎஸ்பி மகேஷூம், பாலியல் வழக்கு காரணமாக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்” என்று தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், திருக்கோவிலூர் பகுதிகளில் உள்ள விடுதிகள் மற்றும் ஊர் ஒதுக்குப்புறத்தில் உள்ள சில குடியிருப்புகளை காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

x