கிருஷ்ணகிரி: போலி முகாம்கள் குறித்து தகவல்களை மறைத்ததாக என்சிசி பயிற்சியாளர் கைது


கோபு

கிருஷ்ணகிரி: போலி முகாம்கள் குறித்த தகவல்களை மறைத்ததாக, என்சிசி பயிற்சியாளரை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் நடந்த போலி என்சிசி முகாமில் கலந்து கொண்ட 12 வயது மாணவி போலி பயிற்சியாளர் சிவராமன் என்பவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார்.

மேலும், 13 மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானார்கள். இச்சம்பவத்தில் சிவராமன் மற்றும் சம்பவத்தை மறைத்த பள்ளி தாளாளர், முதல்வர் உட்பட மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே கைது நடவடிக்கைக்கு முன்பு, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சிவராமன், சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 23-ம் தேதி உயிரிழந்தார்.

பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்து, தமிழக முதல்வர் உத்தரவின் பேரில், ஐ.ஜி. பவானீஸ்வரி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவும், சமூக நலத்துறை செயலாளர் ஜெய முரளிதரன் தலைமையிலான பல்நோக்கு குழுவினரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் வேறு ஒரு தனியார் பள்ளியில் சிவராமனால் நடத்தப்பட்ட போலி முகாமில் கலந்து கொண்ட 14 வயது மாணவியும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரிந்தது. தொடர்ந்து அப்பள்ளியின் பெண் முதல்வரும் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், சிவரா மனால் நடத்தப்பட்ட போலி முகாம்கள் குறித்த தகவல்களை மறைத்ததாக, நேற்று காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியரும், என்சிசி பயிற்சியாளருமான கோபு(47) என்பவரை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, சிவராமன் நடத்திய போலி முகாம்கள் குறித்து தெரிந்தும், மாவட்ட என்சிசி ஒருங்கிணைப்பாளர் கோபு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், அவருக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.

குறிப்பாக சில தனியார் பள்ளிகளில் நடந்த போலி முகாம்களில் கோபுவும் கலந்து கொண்டது தெரியவந்ததாக அளித்த புகாரின்படி கைது செய்யப்பட்டுள்ளார், என்றனர்.

x