திருச்சி: திருச்சி மேலப்புதூரில் டிஇஎல்சி நிர்வாகக் கட்டுப்பாட்டில் இயங்கும் பிஷப் ஹைமன் தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளிக்கான விடுதி அந்த வளாகத்தில் உள்ளது. பள்ளி தலைமை ஆசிரியராக கிரேஸ் சகாயராணி (54) இருந்து வந்தார். அவரது மகனும், சிறுமயங்குடி அரசு மருத்துவருமான சாம்சன் டேனியல் (31), விடுதிக்கு சென்று மருத்துவம் பார்ப்பதாகக் கூறி கடந்த 6 மாதங்களாக குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை தந்து வந்துள்ளார்.
இந்நிலையில், குழந்தைகள் உதவி மையம் எண்ணுக்கு வந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜீவ்காந்தி புகாரின் பேரில், கோட்டை அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சாம்சன் டேனியல், குற்றத்தை மறைத்த, உடந்தையாக இருந்ததாக அவரது தாயார் சகாய ராணி ஆகிய இருவரையும் கைது செய்து, டேனியலை திருச்சி மத்திய சிறையிலும், அவரது தாயாரை திருச்சி மகளிர் தனிச் சிறையிலும் அடைத்தனர்.
இந்நிலையில், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் சுப்பிரமணியன் பரிந்துரையின் பேரில் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குநரகம், மருத்துவர் சாம்சன் டேனியலை பணியிடை நீக்கம் செய்தது. அதேபோல, திருச்சி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மதியழகன் அறிவுறுத்தலின் பேரில், பிஷப் ஹைமன் பள்ளித் தாளாளர் ஆண்ட்ரூ ரூபன், கிரேஸ் சகாய ராணியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.