உதகை: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வடமாநில இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து உதகை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சோம்ரா ஓரான் (20). இவர் நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த மஞ்சூர் பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டில் கடந்த ஆண்டு பணியாற்றி வந்தார். இதேபோல் இவருடன் எஸ்டேட்டில் பணியாற்றும் வடமாநிலத்தை சேர்ந்த பலரும் எஸ்டேட் நிர்வாகத்துக்கு சொந்தமான அதே பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 12-11-2023 அன்று எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் தங்கி உள்ள வடமாநில கூலி தொழிலாளி தம்பதியின் 5 வயது மகளை, சோம்ரா ஓரான் ஆசை வார்த்தை கூறி அருகில் உள்ள புல்வெளி பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு வைத்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து வெளியில் கூறக்கூடாது என்று சிறுமியை அவர் மிரட்டியதாக தெரிகிறது. இந்நிலையில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி, இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அவரை உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இது குறித்து உதகை ஊரக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் அப்போதையை ஆய்வாளர் மீனா பிரியா, உதவி ஆய்வாளர் லட்சுமி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சோம்ரா ஓரானை கைது செய்தனர்.
மது போதையில் அவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதன் பின்னர் அவரை கூடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உதகை கிளை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதன்படி குற்றம் சாட்டப்பட்ட சோம்ரா ஓரானுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி லிங்கம் தீர்ப்பளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜராகி வாதாடினார். இதன் பின்னர் சோம்ரா ஓரான் கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
10 மாதங்களில் தீர்ப்பு: பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள். இதே போல் இந்த வழக்கில் குற்றவாளியும் வட மாநிலத்தை சேர்ந்தவர். மேலும் சாட்சியாக சேர்க்கப்பட்டவர்களும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு தமிழ் தெரியவில்லை. இரு தரப்பிலும் கருத்து பரிமாற்றம் பெரும் சவாலாக இருந்தது. இந்தப் பிரச்சினைக்கு மத்தியிலும் 10 மாதத்தில் போலீஸார் வழக்கை முடித்தது குறிப்பிடத்தக்கது.