திருச்சி: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையைச் சேர்ந்தவர் பாலமுத்து (30). கேஸ் அடுப்பு பழுது பார்க்கும் வேலை செய்து வருகிறார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கல்லாத்துப்பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி செல்வராணி. இவர் வண்டு கடிக்கு மருந்து கொடுத்து வரும் வேலை செய்து வந்தார். பாலமுத்து மற்றும் செல்வம் இருவரும் உறவினர்கள்.
பாலமுத்து, செல்வராணி வீட்டில் தங்கி அருகில் உள்ள கிராமங்களுக்கு கேஸ் அடுப்பு பழுது நீக்கும் வேலைக்கு செல்வார். அப்போது செல்வராணியும் அவருடன் வண்டு கடிக்கு மருந்து கொடுக்க செல்வார். இந்நிலையில், பாலமுத்து இருச்சக்கர வாகனம் வாங்குவதற்காக தொப்ப நாயக்கன்பட்டியைச் சேர்ந்த டூவீலர் பைனான்சியர் அருண்குமார் என்பவரிடம், செல்வராணி பணம் வாங்கிக் கொடுத்தார். இந்தக் கடனுக்கு செல்வராணி உத்தரவாதம் அளித்திருந்தார்.
கடன் தொகைக்கான 2 தவணைகள் மட்டும் செலுத்திய பாலமுத்து அடுத்த தவணை செலுத்தவில்லை. இதையடுத்து அருண்குமார், செல்வராணிக்கு நெருக்கடி கொடுத்தார். இதுதொடர்பாக கடந்த 2019ம் ஆண்டு செப்.19ம் தேதி ரெட்டியப்பட்டி அருகே இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பாலமுத்து, கட்டையால் செல்வராணியை தாக்கியதில் அவர் மயங்கி விழுந்தார். அவர் மயங்கிக் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பாலமுத்துவே, செல்வராணியை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறியதை அடுத்து, செல்வராணியை, பாலமுத்து அங்கு சேர்த்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி செல்வராணி செப்.21ம் தேதி உயிரிழந்தார். இது குறித்து செல்வராணியின் மகள் உமாவதி அளித்த புகாரின் பேரில் வளநாடு போலீஸார், வழக்குப் பதிவு செய்து பாலமுத்துவை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட 2வது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பி.சரவணன் இன்று தீர்ப்பளித்தார். அதில், மரணம் விளைவிக்கக் கூடிய குற்றம் செய்த, பாலமுத்துவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஏ.பாலசுப்பிரமணியன் ஆஜரானார்.