பெங்களூருவின் பிரபல ஓட்டலான ராமேஸ்வரம் கஃபேயில் வெடிகுண்டு வைத்த மர்மநபர் குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளியைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கர்நாடகா மாநிலம், பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளியில் ராமேஸ்வரம் கஃபே என்ற பெயரில் ஓட்டல் செயல்பட்டு வருகிறது. ராஜாஜிநகர் உள்பட பல பகுதிகளில் அந்த ஓட்டலின் கிளைகள் உள்ளன. இந்த ஓட்டலின் நிர்வாக இயக்குநராக திவ்யா உள்ளார். குந்தலஹள்ளியில் உள்ள அந்த ஓட்டலில் நேற்று மதியம் சுமார் 1 மணியளவில் 2 முறை வெடிகுண்டுகள் வெடித்தன.
இதனால் ஓட்டலில் இருந்த கண்ணாடிகள், தரையில் பதிக்கப்பட்ட கிரானைட் கற்கள் உடைந்து சிதறின. இதனால் ஓட்டலில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். வெடிகுண்டு வெடித்ததால் ஓட்டல் முழுவதும் புகைமயமாக மாறியது.
இந்த குண்டு வெடிப்பில் 9 பேர் காயமடைந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீஸார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் ஓட்டலுக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த 9 பேரையும் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஒரு பெண்ணுக்கு தீக்காயம் அதிகம் ஏற்பட்டதாகவும் அவர் உடல்நிலையும் சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி அறிந்ததும் ஒயிட்பீல்டு மண்டல துணை காவல் துறை ஆணையர் சிவக்குமார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார். அப்போது ஓட்டலில் வாடிக்கையாளர்கள் கை கழுவும் பகுதியில் தான் அந்த குண்டுகள் வெடித்து சிதறியது தெரியவந்தது.
முதலில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியிருப்பதாக தகவல் பரவியது. ஆனால், போலீஸார் நடத்திய விசாரணையில், கை கழுவும் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த ஒரு பையில் வைத்திருந்த வெடிகுண்டுகள் தான் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியிருப்பது உறுதி செய்யப்பட்டது. கை கழுவும் பகுதியில் ஒரு குப்பைத் தொட்டியும், அந்த பையும் மட்டுமே இருந்தது. அந்த பையில் பேட்டரி, இரும்பு போல்டு, ஒரு அடையாள அட்டை ஆகியவையும் போலீஸாரிடம் சிக்கியது.
அவற்றைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, அந்த ஓட்டலுக்கு காவல் துறை டிஜிபி அலோக் மோகன், பெங்களூரு காவல் ஆணையர் தயானந்த் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த ஓட்டலுக்கு மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து ஒயிட்பீல்டு மண்டல போலீஸார் மற்றும் என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெடிகுண்டு வெடித்த இடத்தை கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மற்றும் உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி. பரமேஸ்வரா ஆகியோர் பார்வையிட்டனர்.
இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவகுமார், " ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் மதியம் 1 மணியளவில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. ஒருவர் பேருந்திலிருந்து இறங்கி, ஓட்டலில் காலை உணவை சாப்பிட்டுவிட்டு பையை வைத்துவிட்டுச் சென்றுள்ளார். அவர் அங்கிருந்து வெளியேறிய ஒரு மணி நேரத்திற்குப் பிறகு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இது குறைந்த தீவிரம் கொண்ட குண்டுதான். காயமடைந்த அனைவரும் நலமாக இருக்கின்றனர். சிசிபி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகள் கிட்டத்தட்ட அடையாளம் காணப்பட்டுள்ளனர், விரைவில் கைது செய்யப்படுவார்கள்” என்று கூறினார்.
காவல்துறை வட்டார தகவலின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் அரசு பேருந்தில் இருந்து இறங்கி, காலை 11:30 மணியளவில் ராமேஸ்வரம் கஃபே ஓட்டலுக்குள் நுழைந்தார். பின்னர் கேஷ் கவுண்டர் அருகே சென்று ரவா இட்லிக்கான டோக்கன் வாங்கினார். காலை உணவை சாப்பிட்டுவிட்டு, கைகளைக் கழுவிவிட்டு, வெடிகுண்டு இருந்ததாக கூறப்படும் பையை வாஷ் பேசின் அருகே வைத்தார். காலை 11.44 மணிக்கு ஓட்டலை விட்டு வெளியேறினார். மதியம் 12.55 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு நடந்தது. குற்றவாளிகள் ஓட்டலில் டைமர் வெடிகுண்டு வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்த குண்டுவெடிப்பு ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. சந்தேக நபர் முகமூடி அணிந்திருந்ததாகவும், 30-35 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலைச் சீர்குலைக்க தீவிரவாத செயலில் ஈடுபடுபவர்கள் யாரும் குண்டு வைத்தார்களா என என்ஐஏ ஆய்வு செய்கிறது. மேலும் குற்றவாளிகளைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.