திருவெறும்பூரில் துரித உணவு  சாப்பிட்ட பெல் தொழில்நுட்ப உதவியாளர் குடும்பத்துடன் மருத்துவமனையில் அனுமதி


திருச்சி: திருவெறும்பூர் அருகே உள்ள துரித உணவகத்தில் பார்பிக்யூ சிக்கன் மற்றும் சிக்கன் ஃப்ரைட் ரைஸ் வாங்கி சாப்பிட்ட பெல் தொழில்நுட்ப உதவியாளர், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டு பெல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெல் குடியிருப்பைச் சேர்ந்தவர் சுரேந்தர் (40). இவர் பெல் நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா (37). மகள் தனிஷா (11). இந்நிலையில், சுரேந்தர் கடந்த செப்.1-ம் தேதி திருவெறும்பூர் அருகே உள்ள அரசு ஐடிஐ பகுதியில் உள்ள ஒரு தனியார் உணவகக் கடையில் பார்பிக்யூ சிக்கன் மற்றும் சிக்கன் ஃபிரைட்ரைஸ் பார்சல் வாங்கிச் சென்று வீட்டில் குடும்பத்துடன் சாப்பிட்டுள்ளனர்.

இதில் 2-ம் தேதி காலை தனிஷாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவரை பெல் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர். அன்று மதியமே சங்கீதாவுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து சங்கீதாவை பெல் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து குளுக்கோஸ் ஏற்ற வேண்டுமென மருத்துவர்கள் கூறியுள்ளனர்.அதன்படி அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டதோடு உள்நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து சுரேந்தருக்கு அன்று இரவு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. சுரேந்தரும் பெல் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு உள்ளார். மூவருக்கும் உணவு ஒவ்வாமையால் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.தனிஷாவுக்கு விட்டு விட்டு காய்ச்சல் வந்துள்ளது. இதனால் அவர் உறவினர் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். சுரேந்தருக்கும், சங்கீதாவுக்கும் தொடர்ந்து வயிற்றுப்போக்கு நிற்காமல் கடந்த 5 நாட்களாக உள்ளதால் பெல் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில் பெல் மருத்துவமனை நிர்வாகம் அவர்கள் இருவரையும் திருச்சியில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் செய்வதற்காக அனுப்பியுள்ளது. அண்மையில் திருவெறும்பூர் அருகே அரியமங்கலம் கீழ அம்பிகாபுரத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி ஜான் ஸ்டெபி ஜாக்லின் ஆன்லைனில் சைனீஸ் நூடுல்ஸ் ஆர்டர் செய்து சமைத்துப் சாப்பிட்டு உயிரிழந்த நிலையில், ஒரு தனியார் உணவகத்தில் துரித உணவு வாங்கி சாப்பிட்டதில் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த 4 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் சம்பவம் திருவெறும்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உயிரிழந்த மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வெளியாகவில்லை. மேலும் பிரேத பரிசோதனை செய்தபோது, அவரது மூக்கிலிருந்து கோக் மற்றும் நூடுல்ஸ் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. மாணவியின் மர்ம மரணம் குறித்து அரியமங்கலம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

x