ஜோலார்பேட்டையில் கேட்பாரற்ற 9 கிலோ கஞ்சாவை பதுக்கிய ரயில்வே காவலர்கள் இருவர் சஸ்பெண்ட்


திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் கேட்பாரின்றி கிடந்த 9 கிலோ கஞ்சாவை பதுக்கியதாக ரயில்வே காவலர்கள் இருவரை சஸ்பெண்ட் செய்து ரயில்வே எஸ்பி ஈஸ்வரன் உத்தரவிட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில் நிலையம் தமிழகத்தில் மிகப்பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்த ரயில் நிலையம் மார்க்கமாக கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. பல முக்கிய மாநிலங்களை இணைக்கும் ரயில் நிலையமாக ஜோலார்பேட்டை ரயில் நிலையம் விளங்கி வருகிறது.

இந்நிலையில் பல்வேறு மாநிலங்களுக்கு ஜோலார்பேட்டை மார்க்கமாக விரைவு மற்றும் பயணிகள் ரயில்கள் இயக்கப்படுவதால் சமூக விரோத செயலில் ஈடுபடும் மர்ம நபர்கள் கஞ்சா, மது பாட்டில்கள், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை ரயில்களில் கடத்தி வந்து ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனை தடுக்க ரயில்வே காவல் துறை மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் ஜோலார்பேட்டை உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ரயில்களில் கஞ்சா கடத்தி வருபவர்களை கண்காணித்து கஞ்சாவை பறிமுதல் செய்தும், கஞ்சா கடத்தலில் ஈடுபடும் நபர்களை கைது செய்தும் வருகின்றனர். இந்நிலையில், ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் பணிபுரியும் ரயில்வே காவலர்களான சந்துரு, மணிகண்டன் ஆகிய இரண்டு பேர் கடந்த 3-ம் தேதி ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் 4-வது நடைமேடையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, காவலர்கள் சோதனைக்கு வருவதை பார்த்து பயந்து ரயிலில் கடத்தி வந்த கஞ்சாவை மர்ம நபர்கள் ஒரு பையில் போட்டு அதை அங்குள்ள நடைமேடையில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் பதுக்கி வைத்துவிட்டு சென்றனர்.

அங்கு ரோந்துப்பணியில் ஈடுபட்ட ரயில்வே காவலர்கள் சந்துரு மற்றும் மணிகண்டன் ஆகியோர் கேட்பாரின்றி கிடந்த பையை எடுத்து சோதனை செய்வதில் அதில் பண்டல்களாக கட்டப்பட்டு 9 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ரயில்வே காவலர்கள் சந்துரு மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் கேட்பாரின்றி கிடந்த 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைக்காமல் அவற்றை அவர்களே வேறு இடத்தில் பதுக்கியதாக கூறப்படுகிறது.இது குறித்து ரயில்வே எஸ்.பி. ஈஸ்வரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைதொடர்ந்து, ரயில்வே காவலர்கள் 2 பேரிடம் விசாரணை நடத்த ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினருக்கு எஸ்பி ஈஸ்வரன் உத்தரவிட்டார். அதன்பேரில், நடத்தப்பட்ட விசாரணையில் நடைமேடையில் கேட்பாரின்றி கிடந்த 9 கிலோ கஞ்சாவை ரயில்வே காவலர்கள் சந்துருவும், மணிகண்டன் கூட்டு சேர்ந்து அதை பதுக்கியது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்து ரயில்வே எஸ்பி ஈஸ்வரன் உத்தரவிட்டார். இந்த சம்பவம் ரயில்வே காவலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x