அதிகாலையில் அதிர்ச்சி... பெண் சுட்டுக் கொலை!


துப்பாக்கிச் சூடு

டில்லியில் பெண்களுக்கு எதிரான கொடூர குற்றங்கள் அதிகரித்து வருவதன் மத்தியில், அதன் எண்ணிக்கையில் மேலும் ஒன்று கூடியுள்ளது.

தேசத்தின் தலைநகர் டெல்லியில் அண்மைக் காலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக, சாமானிய மக்கள் மட்டுமன்றி டெல்லி முதல்வர் முதல் தேசிய மகளிர் ஆணையம் வரை அதிருப்தி குரல்கள் எழுந்து வருகின்றன. பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் தேசிய மகளிர் ஆணையமே தன்னிச்சையாக டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட்டதும், விளக்கம் கோரியதும் நடந்திருக்கிறது.

முதல்வர் கேஜ்ரிவாலும், டெல்லி போலீஸாரின் அசிரத்தை குறித்து தொடர்ந்து தனது ஆதங்கத்தை பதிவு செய்து வருகிறார். டெல்லி காவல்துறையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் டெல்லி துணைநிலை ஆளுநர் மற்றும் உள்துறை அமைச்சகத்துக்கு எதிராகவும் கேஜ்ரிவால் குமுறி வருகிறார். இவற்றின் மத்தியில், பெண்களுக்கு எதிரான மற்றுமொரு குற்ற சம்பவம் தற்போது அரங்கேறி இருக்கிறது.

கஞ்ச்வாலா ஜெ.ஜெ.காலனியில் நேற்று அதிகாலை 12.30 மணியளவில், அப்பகுதியில் இருந்த ஒரு வீட்டின் கதவைத் தட்டி, மர்ம கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இதில் மர்ம கும்பலின் குறிவைப்புக்கு ஆளான பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதே குடும்பத்தைச் சார்ந்த இன்னொரு உறுப்பினர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கிச் சூடு சம்பவம் மற்றும் பெண் பலியானது தொடர்பாக கஞ்ச்வாலா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

x