பகீர்... 91 குழந்தைகளைச் சீரழித்த பராமரிப்பாளர்... 1623 பாலியல் குற்றங்கள்!


குழந்தைகளுக்கு எதிரான குற்றம்

குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பில் இருக்கும் ஒருவரே, கற்பனைக்கும் எட்டாத வகையிலான பாலியல் குற்றங்களை நிகழ்த்தி இருப்பது ஆஸ்திரேலியா தேசத்தை அலற வைத்திருக்கிறது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து, அண்மையில் இணையத்தின் இருட்டு பிரதேசமான ’டார்க் நெட்’ வாயிலாக, ஆஸ்திரேலியா புலனாய்வாளர்களுக்கு சில தகவல்கள் கிடைத்தன. டார்க் நெட்டில் விரவிக் கிடந்த குழந்தை பாலியல் படங்களின் அடிப்படையில், சைபர் புலனாய்வாளர்கள் நூல் பிடித்துச் சென்றதில் 45 வயதாகும் நபர் ஒருவர் கைதானார்.

பிரிஸ்பேன் பகுதியில் குழந்தைகள் பராமரிப்பு மையம் ஒன்றினை நடத்தி வரும் அந்த நபர் ஒட்டுமொத்தமாக 91 குழந்தைகளை சீரழித்திருப்பது தெரிய வந்திருக்கிறது. உலகளவில் நிகழ்ந்திருக்கும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களாக அவற்றை ஆஸ்திரேலியா போலீஸார் அடையாளம் கண்டிருக்கின்றனர்.

எண்ணிக்கை அடிப்படையில் 1623 பாலியல் குற்றங்களை அந்த நபர் நிகழ்த்தியிருப்பதும், அவை அனைத்திலும் பத்து வயதுக்கும் குறைவான குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதும் போலீஸார் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

கைதான நபரிடமிருந்து 2007 - 2022 இடையே பதிவு செய்யப்பட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலியல் புகைப்படங்களை சேகரித்திருக்கும் போலீஸார், அவை அனைத்தும் பருவமடையக் காத்திருக்கும் பெண் குழந்தைகளை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகளாக இருப்பதைக் கண்டு அதிர்ந்திருக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட 91 குழந்தைகளில் 87 பேர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள். எஞ்சிய குழந்தைகள் ஆஸ்திரேலியாவுக்கு அப்பால், இந்த குழந்தைகள் பராமரிப்பாளர் பயணம் மேற்கொண்ட நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனவும் போலீஸார் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. கைதான குழந்தை பராமரிப்பாளரின் பின்னணியில் உலகளவிலான குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வலைப்பின்னல் இருக்கலாம் என கணித்திருக்கிறார்கள். இதன் அடிப்படையில், 35 புலனாய்வாளர்கள் களத்தில் இறங்கி சர்வதேச அளவிலான விசாரணயை முன்னெடுத்து வருகின்றனர்.

x