திருச்சி: திருச்சியில் பள்ளி விடுதி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில், உரிய அனுமதியின்றி இயங்கிய விடுதியை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தெரிவித்தார்.
திருச்சி மேலப்புதூர் பிஷப் ஹைமன் நினைவுத் தொடக்கப்பள்ளியில் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜீவ்காந்தி, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் விஜயலட்சுமி ஆகியோர் தலைமையிலான குழுவினர் பள்ளி விடுதியில் ஆய்வு செய்தனர்.
பின்னர், இதுகுறித்து திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜீவ்காந்தி கூறியது: பள்ளியில் 46 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இதில், 42 பேர் விடுதியில் தங்கி உள்ளனர்.
இதில், தாய் அல்லது தந்தை இல்லாத மற்றும் இருவரும் இல்லாத, பெற்றோர் இருந்தும் கவனிப்பாரற்ற 9 குழந்தைகளை மீட்டு எங்களது கட்டுப்பாட்டில் உள்ள விடுதிகளில் தங்க வைத்துள்ளோம். மற்ற குழந்தைகளின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விரும்பினால், எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள விடுதிகளில் குழந்தைகளை தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், விடுதியை ஆய்வு செய்ததில் அந்த விடுதி உரிய அனுமதி பெறவில்லை. விடுதிக்கு அனுமதி பெற வேண்டும் என்றால், ஒரு குழந்தைக்கு 40 சதுரஅடி பரப்பளவு இடம் ஒதுக்க வேண்டும். கான்கிரீட் கட்டிடத்தில் தான் விடுதி செயல்பட வேண்டும். 7 குழந்தைகளுக்கு ஒரு கழிப்பறை, 10 குழந்தைகளுக்கு ஒரு குளியல் அறை இருக்க வேண்டும்.
இவை எதுவுமே அந்த விடுதியில் இல்லை. 2 டார்மெட்ரி ஹால் மட்டுமே உள்ளது. அவற்றில் தான் குழந்தைகள் ஒன்றாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, அந்த விடுதியை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.