பெங்களூருவில் ஆன்லைன் மேட்ரிமோனி இணையதளங்களின் மூலம் சுங்கத்துறை அதிகாரி என்றும், ஐடி ஊழியர் எனவும் கூறி 259 பெண்களிடம் மோசடியில் ஈடுபட்ட மோசடி மன்னனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கோவையைச் சேர்ந்த இளம் விதவை ஒருவர் மறுமணம் செய்வதற்காக மேட்ரிமோனி இணையதளங்களில் பதிவு செய்து வைத்திருந்தார். அப்போது அவருக்கு இணையதளம் மூலம் அறிமுகமான வரன் ஒருவர், தான் பெங்களூரு விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரியாக இருப்பதாகவும், விதவை ஒருவரை மறுமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதனால் அந்த பெண்ணும் அவருடன் பேசி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவரும் செல்போன் மூலம் பேசி வந்துள்ளார். அப்போது தனக்கு 25 வயது எனவும், ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்ட தான் பெங்களூருவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 23ம் தேதி குடும்பத்தினருடன் பெங்களூரு வருமாறு அப்பெண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அப்பெண்ணும் தனது குடும்பத்தினருடன் பெங்களூரு விமான நிலையத்திற்கு சென்ற போது, தனக்கு அவசர வேலை இருப்பதால், தனது மாமா அவர்களை வந்து சந்திப்பார் என போன் மூலம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அப்பெண்ணை மற்றொரு எண்ணில் தொடர்பு கொண்ட 45 வயது மதிக்கத்தக்க ஒருவர், நேரில் சென்று அப்பெண் குடும்பத்தினரை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, மணமகனின் குடும்பத்தினர் நேரில் வந்து சந்திக்க, ரயில் டிக்கெட் எடுக்க 10 ஆயிரம் ரூபாய் வழங்கினால் உடனே திருமணம் குறித்து பேசி முடிவெடுத்துவிடலாம் என அவர் கூறியுள்ளார்.
இதனை உண்மை என நம்பி அவர்கள் பணம் கொடுத்த சில நிமிடங்களில் அந்த நபர் அங்கிருந்து மாயமாகி உள்ளார். அதே சமயம், சுங்கத்துறை அதிகாரியின் எண்ணும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால், சந்தேகமடைந்த பெண்ணின் குடும்பத்தினர் உடனடியாக போலீஸில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில் 2 செல்போன் எண்களுமே ஒரே நபரின் பெயரில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவரது பெயர் நரேஷ் புஜாரி கோஸ்வாமி என்பது தெரியவந்தது. மேட்ரிமோனி இணையதளங்களில், இளைஞர்களின் புகைப்படங்களை வைத்து, விதவைகள், விவாகரத்து பெற்றவர்களை குறிவைத்து இதே போன்று பல ஆண்டுகளாக மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும், இதுவரை 10 மாநிலங்களைச் சேர்ந்த 259 பெண்களை, வெவ்வேறு பணிகளில் இருப்பதாக கூறி ஏமாற்றியதற்கான ஆதாரங்களையும் போலீஸார் அவரிடம் இருந்து திரட்டியுள்ளனர். இதையடுத்து நரேஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பெங்களூரு ரயில்வே டிஐஜி எஸ்.டி.ஷரனப்பா, “மேட்ரிமோனி விளம்பரங்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். மணமகன் குறித்து உறுதியான தகவல்கள் தெரிந்த பின்னரே அவருடன் நேரடியாக தொடர்பு கொள்ள முயற்சிக்க வேண்டும். இது போன்ற மோசடி நபர்கள் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தால், அடுத்தடுத்த மோசடிகளை தவிர்க்கலாம். அதே போல் பணத்தையும் விரைவாக மீட்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.