ஹோட்டலுக்கு சாப்பிட வந்த சிறுமியை கடத்த முயன்றதாக கோவையில் இருவர் கைது


கோவை: கோவை இருகூரை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தன் மனைவி மற்றும் 5 வயது மகளுடன் கோவை ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள ஒரு ஹோட்டலில் நேற்று முன்தினம் சாப்பிடச் சென்றார். பின்னர் அவர்கள் 3 பேரும் சாப்பிட்டு முடித்துவிட்டு, கை கழுவ வந்தனர். அப்போது வழக்கறிஞர் செல்போனில் அழைப்பு வந்தது.

அவர் செல்போனில் பேசியபடி வெளியே சென்றார். அவருடைய மனைவி கழிவறை சென்றார். அப்போது 5 வயது சிறுமி கை கழுவும் இடத்தில் நின்று கொண்டிருந்தார்.

அங்கு வந்த 2 பேர் அந்த சிறுமியை கடத்த முயன்றனர். அதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த வழக்கறிஞர் சத்தம் போட்டார். அத்துடன் அவர் மற்றும் அந்த ஹோட்டலில் நின்றவர்கள் ஓடிச் சென்று அந்த 2 பேரையும் பிடித்ததுடன், அவர்களிடம் இருந்து அந்த சிறுமியை மீட்டனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் ரேஸ்கோர்ஸ் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

போலீஸார் அந்த 2 பேரிடமும் விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள், கோவை குளத்துப்பாளையத்தை சேர்ந்த மணிவண்ணன்(30), பத்மநாபன் (30) என்பதும், அவர்கள் மது போதையில் இருந்ததும் தெரியவந்தது.

அவர்கள் இருவரும், சிறுமி கை கழுவ உதவி செய்ததாக போலீஸாரிடம் தெரிவித்தனர். அதேசமயம், சிறுமியின் தந்தை கடத்த முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து மணிவண்ணன், பத்மநாபன் ஆகியோரை போலீஸார் கைது செய்து பிணையில் விடுவித்தனர்.

x