கர்நாடக மாநிலம் கோலாரில் இருந்து ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு 21 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தக்காளியை ஏற்றிச் சென்ற லாரி காணாமல் போயுள்ளது. இந்த லாரியையும், அதன் ஓட்டுநரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநரும், அவரது கூட்டாளியும் இணைந்து தனது லாரியையும், அதில் இருந்த 21 லட்ச ரூபாய் மதிப்புள்ள தக்காளியையும் திருடிச் சென்றுள்ளதாக, லாரி உரிமையாளர் கோலார் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மாயமான லாரியை கண்டுபிடிக்க போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து தக்காளி விலை அதிகரித்து வருவதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தக்காளி திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தற்போதைய சூழலில் தக்காளியின் விலை ஒரு கிலோ 170 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில், கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தில் ரூ.2.7 லட்சம் மதிப்புள்ள தக்காளி திருடப்பட்டது. இந்நிலையில் தற்போது 21 லட்ச ரூபாய் மதிப்புள்ள தக்காளி திருடப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.