அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி மீது தாக்குதல்: 8 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு


அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 8 பேர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதிஅருகேயுள்ள பெருமாள்தேவன்பட்டியைச் சேர்ந்த மினி லாரி ஓட்டுநர்காளிகுமார் (33), கடந்த திங்கள்கிழமைதிருச்சுழி-ராமேசுவரம் சாலையில் கேத்தநாயக்கன்பட்டி விலக்குப் பகுதியில் கொலை செய்யப்பட்டார். பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடல் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம்அங்கு கூடிய காளிகுமாரின் உறவினர்கள், கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது, அவர்களை தடுத்து நிறுத்திய அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரியை சிலர் தாக்கினர்.

டிஎஸ்பி தாக்கப்பட்டது தொடர்பாக நெல்லிக்குளத்தைச் சேர்ந்த பாலமுருகன் (30), முத்துப்பட்டி முருகேசன், பெருமாள்தேவன்பட்டி பொன்முருகன் (21), ஜெயராம்குமார் (21), சஞ்சய்குமார் (19), பாலாஜி (21), அம்மன்பட்டி சூரியா (25), காளிமுத்து (23) ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், காவல் துறை அதிகாரி மீது தாக்குதல், அரசு அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்தது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது, அனுமதியின்றி போராட்டம் நடத்தியது உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இவர்களில், பாலமுருகன் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார். முத்துப்பட்டியைச் சேர்ந்த முருகேசனைத் தவிர மற்ற 6 பேரும் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள முருகேசனை, திருச்சுழி டிஎஸ்பி ஜெகநாதன் தலைமையிலான தனிப்படைபோலீஸார் தேடி வருகின்றனர். மேலும், சாலை மறியலில் ஈடுபட்ட காளிகுமார் உறவினர்கள் 116 பேர் மீது அருப்புக்கோட்டை நகர்போலீஸார் தனியாக வழக்கு பதிவுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓபிஎஸ் வலியுறுத்தல்.. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், “அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பி தாக்கப்பட்டது கடும் கண்டனத்துக்குரியது. சமூக விரோதிகள்மீது மென்மையான போக்கை திமுக அரசு கடைப்பிடிப்பதே இதுபோன்ற நிலைக்கு காரணம். டிஎஸ்பி மீது கொடூரத் தாக்குதல் நடத்தியவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுத் தருவதுடன், இனியும் இதுபோன்ற நிகழ்வுகள் நேரிடாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்

x