வேலைவாங்கித் தருவதாக ரூ.1.31 கோடி மோசடி: ஐஏஎஸ், தலைமைச் செயலர் என நாடகமாடிய 8 பேருக்கு வலை 


திருச்சி: அரசு வேலை வேலைவாங்கித் தருவதாக கூறி ரூ.1.31 கோடி பண மோசடி செய்ததுடன், ஐஏஎஸ் அதிகாரி, தலைமைச் செயலர் என நாடகமாடியவர்கள் உட்பட 8 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பெருங்குடி வேலாயுதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்து மகன் முத்துக்குமார் (33) எம்எஸ்சி, பிஎட் பட்டதாரியான இவர், அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்தார். இந்நிலையில் முத்துக்குமாருக்கு கடந்த ஆண்டு கவுரிசங்கர் என்கிற கவுதம் என்பவர் அறிமுகமானார். பின்னர் அவர், உஷாராணி என்பவரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (டிஎன்பிஎஸ்சி) வேலை பார்ப்பதாக கூறி முத்துக்குமாருக்கு அறிமுகம் செய்துள்ளார். மேலும் பணம் கொடுத்தால் அவர் மூலமாக அரசு வேலை வாங்கிவிடலாம் என தெரிவித்தார்.

அதன் பின்னர் முத்துக்குமாருக்கு மேலும் 6 பேரை அறிமுகம் செய்துள்ளார். இதில் முத்துலட்சுமி என்பவர் ஐஏஎஸ் அதிகாரி எனவும், திருநாவுக்கரசு அரசு தலைமைச் செயலர் எனவும், மணிமாறன் உதவி கலெக்டர் எனவும், இளையராஜா, ராஜ்குமார் ஆகியோர் நீர்வள ஆதாரத்துறையில் உதவி செயற்பொறியாளர்களாக பணியாற்றுவதாகவும் அறிமுகம் செய்து வைத்தார்.

இதை நம்பிய முத்துக்குமார் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என 10 பேரிடம் ரூ.1 கோடியே 31 லட்சத்து 685 பணத்தை வசூல் செய்து கவுதம், உஷாராணி, ராஜ்குமார், இளையராஜா, முத்துலட்சுமி, திருநாவுக்கரசு, ராஜேந்திரன், மணிமாறன் ஆகிய 8 பேரிடம் திருச்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைத்து பல்வேறு தவணையாக கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் கவுதம் சிலருக்கு பணி நியமன ஆணை வழங்கினார். பின்னர் அந்த ஆணைகள் அனைத்தும் போலி என்பது தெரியவந்தது. இந்த மோசடி 2023 பிப்ரவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் நடந்துள்ளது. பின்னர் பாதிக்கப்பட்ட முத்துக்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு ஆய்வாளர் அன்புசெல்வன், கவுதம் உள்ளிட்ட 8 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

x