திருநெல்வேலி: மானூர் அருகே தாய், மகன் கொலை வழக்கில் 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
மானூர் அருகே குறிச்சிகுளத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (45). இவரது தாயார் கோமதியம்மாள் (65). அதே ஊரை சேர்ந்த சிராஜ் என்ற சிராஜுதீன் (45), இவரது சகோதரர் லத்தீப், இவர்களது உறவினர் நாகூர் மீரான் (41). அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் சிராஜுதீனுக்கும் தகாத உறவு இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் சுப்பிரமணியனுக்கு சொந்தமான மாட்டுத் தொழுவத்தில் சிராஜுதீனும், அப்பெண்ணும் தனிமையில் இருந்துள்ளனர். இதை சுப்பிரமணியனும், அவரது தாயாரும் கண்டித்துள்ளனர். இதனால் அவர்கள் மீது சிராஜூதீனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி ஊருக்கு அருகேயுள்ள தோட்டத்தில் இருந்து சுப்பிரமணியனும், அவரது தாயாரும் புற்களை அறுத்து கொண்டுவந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை வழிமறித்த சிராஜூதீன், அவரது சகோதரர் லத்தீப், உறவினர் நாகூர் மீரான் மற்றும் அப்பெண் ஆகியோர் அரிவாளால் வெட்டியதில் சுப்பிரமணியனும், அவரது தாயாரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து மானூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து சிராஜூதீன் உட்பட 4 பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட 1-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்து, சிராஜூதீன், நாகூர் மீரான் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பத்மநாபன் தீர்ப்பு கூறினார். சிராஜூதீனுடன் தொடர்பில் இருந்த பெண் விடுவிக்கப்பட்டார். லத்தீப் இறந்துவிட்டதால் அவரது பெயர் வழக்கிலிருந்து நீக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் கருணாநிதி ஆஜரானார்.