நெல்லையில் கூலித் தொழிலாளியிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டிய பெண் காங்கிரஸ் பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி களக்காடு அருகில் உள்ளது தெற்கு மீனவன்குளம். இங்குள்ள நேரு தெருவைச் சேர்ந்தவர் இசக்கி(32) தொழிலாளியாக உள்ளார். இவர் தனது குடும்பச் செலவுக்காக கடந்த 2017 ஆம் ஆண்டு, கீழ்துவரைக்குளம் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி ராணி(50) என்பவரிடம் 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று உள்ளார். இதற்கு மாதம் தோறும் 2500 ரூபாய் வட்டி செலுத்தியும் வந்தார்.
இந்நிலையில் இந்த மாதத்திற்கு வட்டி செலுத்தாமல் இசக்கி இருந்துள்ளார். இதைத் தொடர்ந்து ராணி, இசக்கி வீட்டுக்குப் பணம் கேட்டுச் சென்றுள்ளார். அப்போது இசக்கியின் மனைவி, எஸ்தர் மரியாவிடம் வட்டிகேட்டு அவதூறாகப் பேசி உள்ளார். இதுகுறித்து இசக்கியிடம் எஸ்தர் மரியா தெரிவித்துள்ளார். தொடர்ந்து ராணி இசக்கியைப் பார்த்துக் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். தன் மனைவியை ராணி கண்டித்ததால் மன வருத்தத்தில் இசக்கி விஷம் குடித்தார். இதனைத் தொடர்ந்து அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வட்டி கேட்டு மிரட்டிய ராணியை களக்காடு போலீஸார் இன்று கைது செய்தனர்.