மேற்குவங்க மாநிலத்தில் முறைதவறிப் பிறந்த 11-நாள் பச்சிளம் குழந்தையை ரூ.2 லட்சத்துக்கு விற்ற தாயை போலீஸார் கைது செய்தனர்.
மேற்குவங்க மாநிலம் நரேந்திரபூரைச் சேர்ந்த பெண் சுக்லா தாஸ் (35). இவரது கணவர் 5 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகன் உள்ளார். அந்த சிறுவன் தாத்தா, பாட்டியுடன் வசித்து வருகிறார். சுக்லா தாஸ் வீட்டு வேலை செய்து வந்தார். இந்நிலையில் பக்கத்து வீட்டு நபருடன் சுக்லா தாஸ்க்கு பழக்கம் ஏற்பட்டது. இதில் அவர் கர்ப்பமானார்.
இதையறிந்து அவர் கருவை கலைக்க முயன்றார். கர்ப்பமடைந்து 26 வாரங்கள் ஆனதால், கருவை கலைக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் குழந்தை பிறந்த பின்னர் அதை விற்க சுக்லா தாஸ் முடிவு செய்தார். இதற்கான ஏற்பாட்டை இடைத்தரகர் தபஸ் மொந்தல் மற்றும் அவரது மனைவி சாந்தி ஆகியோர் செய்தனர்.
கொல்கத்தாவின் பஞ்சாசயர் பகுதியைச் சேர்ந்த குழந்தை இல்லாத பெண் ஜூமா மாலிக் என்பவர், சுக்லா தாஸின் குழந்தையை ரூ.2 லட்சத்துக்கு வாங்கிக் கொள்ள முன் வந்தார்.
இந்நிலையில் சுக்லா தாஸ்க்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த 11-வது நாளில் தனது குழந்தையை ஜூமா மாலிக்கிடம், சுக்லா தாஸ் விற்று விட்டார். இந்த ஒப்பந்தத்தை பேசி முடித்ததற்கான கமிஷன் தொகையை தபஸ் மொந்தல் தம்பதியினர் பெற்றுக் கொண்டனர். இந்த சம்பவம் குறித்து சுக்லா தாஸின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் நபர், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். நரேந்திரபூர் போலீஸார் சுக்லா தாஸை அழைத்து இது குறித்து விசாரணை நடத்தினர்.
முறைதவறிப் பிறந்த குழந்தைப் பற்றி சமூகம் தவறாக நினைக்கும் என்பதால், தனது குழந்தையை விற்றதாக போலீஸாரிடம் சுக்லா தாஸ் தெரிவித்தார்.
இதையடுத்து பச்சிளம் குழந்தையை மீட்டு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திடம் போலீஸார் ஒப்படைத்தனர். அரசு காப்பகத்தில் தற்போது சுக்லா தாஸின் குழந்தை பராமரிக்கப்படுகிறது. குழந்தையை விற்ற சுக்லா தாஸ், வாங்கிய ஜூமா மாலிக், இடைத்தரகராக செயல்பட்ட தபஸ் மொந்தல் அவரது மனைவி சாந்தி ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது சிறார் நீதி சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பிறந்து 11 நாட்களேயான பச்சிளங்குழந்தையை பெற்ற தாயே விற்ற சம்பவம் மேற்குவங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.