நூடுல்ஸ் சாப்பிட்டு மாணவி உயிரிழப்பு: திருச்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் நடவடிக்கை


திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ள அரியமங்கலம் கீழ அம்பிகாபுரத்தைச் சேர்ந்தவர் ஜான் ஜூடி மெயில். ரயில்வே ஊழியர். இவரது மகள் ஜான் ஸ்டெபி ஜாக்குலின் மெயில்(16), தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.

இந்நிலையில், ஆக.31-ம் தேதி இரவு ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிய நூடுல்ஸை சமைத்து சாப்பிட்டுவிட்டு ஸ்டெபி உறங்கினார். ஆனால், மறுநாள் காலை உயிரிழந்து கிடந்தார்.

நூடுல்ஸ் சாப்பிட்டதால் மாணவி உயிரிழந்ததாகக் கூறி, இறுதிச்சடங்குக்கு அவரது பெற்றோர், உறவினர் தயாராகி வந்தனர். இதனிடையே, மாணவி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் அரியமங்கலம் போலீஸார் சென்று, மாணவியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறைக்கும் புகார்கள் சென்றன. இதையடுத்து, திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் ஆர்.ரமேஷ்பாபு தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் பாண்டி, கந்தவேல், மகாதேவன் உள்ளிட்டோர் சென்று ஆய்வு செய்தனர். இதில், அந்த மாணவி சைனீஸ் நூடுல்ஸ் வாங்கியதும், திருச்சியில் மொத்த வியாபாரம் செய்யும் ஒரு உணவு வணிக நிறுவனத்தில் இந்த நூடுல்ஸ் இருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து, உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் நேற்று முன்தினம் அந்த உணவு வணிக நிறுவனத்திற்குச் சென்று ஆய்வு செய்து, நூடுல்ஸ் சட்டப்பூர்வ உணவு மாதிரி எடுத்தனர். மேலும், அங்கு காலாவதியான 800 கிலோ உணவுப் பொருட்கள் இருப்பதைக் கண்டறிந்து, அவற்றை பறிமுதல் செய்து அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் அழித்தனர். மேலும், உணவு வணிக நிறுவனத்தை தற்காலிகமாக மூடி சீல் வைத்தனர்.

x