கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டில் பேராசிரியர் மணிமேகலன் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் அறிவியல் துறையில் பேராசிரியராக உள்ள ஏ.மணிமேகலன் மீது உதவி பேராசிரியர்களாக இருக்கக்கூடிய இருபெண்கள் கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி பாலியல் புகார் அளித்தனர்.
புகாரை விசாரித்த பல்கலைக்கழக உள் புகார் குழு அளித்த ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில் மணிமேகலனை பணியிடை நீக்கம் செய்து ஜனவரி 30ம் தேதி பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மணிமேகலன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மனு நீதிபதி என். சதிஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், பாலியல் புகாரை விசாரிக்கும் உள் புகார் குழுவின் தலைவராக பணிபுரியும் இடத்தில் உள்ள மூத்தவர்களை நியமிக்க வேண்டும் என சட்டம் உள்ள நிலையில், தமக்கு எதிரான புகாரை விசாரிக்க மிக இளைய பேராசிரியரை நியமித்தது தவறு என வாதிடப்பட்டது. மேலும், தமக்கு எதிரான புகார் குறித்த விசாரணை அறிக்கையில் குழுவில் இருந்தவர்களில் ஒருவர் கையெழுத்திடவில்லை எனவும் வாதிடப்பட்டது.
பல்கலைகழகம் மற்றும் உள் புகார் குழு தரப்பில், இதுபோன்ற தீவிரமான குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் உள் புகார் குழுவின் தலைவராக யார் நியமிக்கப்படுகிறார் என்பதை பார்க்க தேவையில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதி சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவில், முழுமையாக விசாரணை நடத்தி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மட்டுமே பணியிடை நீக்கம் செய்ய முடியும் எனவும், ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை வைத்து பணியிடை நீக்கம் செய்தது தவறு எனக் கூறி, சஸ்பெண்டை ரத்து செய்து உத்தரவிட்டார்.