விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் பாசிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவரை கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி கருவேப்பிலங்குறிச்சி உதவி ஆய்வாளர் சிவராமன் மற்றும் போலீஸார் போதைப் பொருள் தேடுதல் என்ற பெயரில் கைது செய்தனர்.
ஆனால் பாஸ்கரன் வீட்டில் போதைப் பொருட்கள் எதுவும்கிடைக்கவில்லை. இருப்பினும் பாஸ்கர் மற்றும் அவரது மனைவி காந்திமதி ஆகியோரை உதவி ஆய்வாளர் கடுமையான வார்த்தைகளால் தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது. அதை வீடியோ பதிவு செய்த செல்போனையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து பாஸ்கரன் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்த பாஸ்கரன் கடந்த 20-ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு, கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து பொய் வழக்கு பதிவு செய்து பாஸ்கரனை கைது செய்த கருவேப்பிலங்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 4 பெண் குழந்தைகளைக் கொண்ட பாஸ்கரன் மனைவி காந்திமதிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திட்டக்குடி வட்டச்செயலாளர் அன்பழகன் தலைமையில் நேற்று கருவேப்பிலங்குறிச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட குழு உறுப்பினர் ராஜேந்திரன், விருத்தாசலம் வட்டச் செயலாளர் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மாதவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.