செல்போனைக் காணோம்... புகார் கொடுக்க சென்ற இளைஞரின் பைக்கையும் திருடிய கும்பல்!


புனே இளைஞரிடம் செல்போன், பைக் திருட்டு

விதி எட்டு திசைகளிலும் நின்னு விளையாடுதுன்னு சொல்கிற மாதிரி, ஒருவருக்கு துரதிருஷ்டம் வந்தால், பட்ட காலிலேயே படும் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் புனேவில் நடந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், புனேவைச் சேர்ந்த 29 வயது இளைஞரிடம் உதவி கேட்டு வந்தவர், இளைஞரின் செல்போனைத் திருடிச் சென்றுள்ளார். இது தொடர்பாக போலீஸாரிடம் புகார் கொடுக்க செல்லும் வழியில், தனது இருசக்கர வாகனத்தையும் திருடக் கொடுத்து விட்டு, காவல் நிலையத்திற்கு வந்து நின்ற இளைஞரைப் பார்த்து போலீஸாரே பரிதாபப்பட்டனர்.

வெளி மாநிலத்தை சேர்ந்த 29 இளைஞர் ஒருவர் பணி நிமித்தமாக 2 மாதங்களுக்கு முன்னர் புனேவுக்கு இடம்பெயர்ந்தார். கடந்த ஜூலை 20ம் தேதி அவர் பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, 25 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் சொந்த ஊர் செல்ல பணமில்லை என கூறி உதவி கேட்டுள்ளார். அவரது பரிதாப நிலையை பார்த்து 500 ரூபாய் பணத்தை கூகுள் பே மூலம் கொடுத்துள்ளார். மேலும், அவசரமாக போன் பேச வேண்டும் என கேட்டு, இளைஞரின் போனையும் வாங்கிக் கொண்டு, யாருடனே பேசியபடியே அங்கிருந்து செல்போனுடன் அந்த நபர் தப்பி ஓடினார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த இளைஞர், அருகில் இருந்தவர்களிடம் இது குறித்து கூறி உதவி கேட்டுள்ளார்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் தனக்கு, அருகில் உள்ள போசாரி காவல் நிலையத்தில் தெரிந்தவர் இருப்பதாகவும், அங்கு சென்று புகார் கொடுக்கலாம் என்றும் கூறியுள்ளார். மேலும், போலீஸாருக்கு லஞ்சமாக சிகரெட் வாங்கித் தர வேண்டும் என கூறி அருகே இருந்த கடையில் சிகரெட் வாங்க கூறியுள்ளார். அதனை நம்பிய அந்த இளைஞரும், கடையில் சிகரெட் வாங்க சென்றார். ’

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட உதவிக்கு வந்த நபர், இளைஞரின் இருசக்கர வாகனத்துடன் தப்பிச் சென்றார். அடுத்தடுத்து, தன்னிடம் நடந்த திருட்டால் அதிர்ச்சியடைந்த இளைஞர் உடனடியாக போசாரி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் திருட்டு நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் இப்படி புதிதாக நகருக்குள் வருபவர்களிடம் கொள்ளைக் கும்பல் ஒன்று அடுத்தடுத்து திருட்டில் ஈடுபவதாக பல நாட்களாக புகார்கள் தொடர்ந்து வந்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஒரே நாளில் அடுத்தடுத்து செல்போனையும், இருசக்கர வாகனத்தையும் திருட்டு கொடுத்த இளைஞரின் நிலை பலருக்கும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

x