தனிமையில் இருக்கும் காதலர்களை மிரட்டி பணம் பறிப்பு: காவலர் உள்ளிட்ட இருவர் கைது


தாம்பரம்: தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் தனிமையில் இருக்கும் காதலர்களை மிரட்டி பணம் பறித்து வந்த காவலரும் அவரது நண்பர் ஒருவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தாம்பரம் ரயில் நிலையத்தில் பணியாற்றும் மணிவண்ணன் என்பவர் தன்னுடன் பணிபுரியும் பெண் நண்பர் ஒருவருடன் இரவு பணியை முடித்துவிட்டு தாம்பரம் ரயில்வே மைதானம் அருகே பேசியபடியே நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவரில் ஒருவர், தான் போலீஸ் என்று அவர்களிடம் கூறியபடி, மணிவண்ணனும் அந்தப் பெண் ஊழியரும் தனிமையில் உல்லாசமாக இருப்பதாகச் சொல்லி மிரட்டியவர், கையில் வைத்திருந்த லத்தியால் மணிவண்ணனை தாக்கிவிட்டு அவர் வைத்திருந்த ரூ.4 ஆயிரத்தைப் பறித்துச் சென்றுள்ளார்.

இது தொடர்பாக மணிவண்ணன் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சேலையூர் போலீஸார் பணம் பறிப்பில் ஈடுபட்டவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை கொண்டு விசாரணை செய்தனர். அப்போது, தாம்பரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் அருண்ராஜ் (45) மற்றும் அவரது நண்பர் சதீஷ்குமார் (31) ஆகிய இருவரும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து இருவரையும் சேலையூர் போலீஸார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர். அப்போது, தாங்கள் இருவரும் இரவு நேரங்களில் தனிமையில் எல்லை மீறும் ஜோடிகள் மற்றும் தனிமையில் இருக்கும் காதலர்களை மிரட்டி பணம் பறித்து வந்ததாக கூறியுள்ளனர். இதையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

x