பணக்கார சபலிஸ்டுகளை குறிவைத்து ‘ஹனி டிராப்’; கேரள சீரியல் நடிகை மற்றும் நண்பர் கைது


நித்ய ஸ்ரீ

கேரள டிவி நடிகையின் ஹனி டிராப் வலையில் சிக்கி லட்சங்களை இழந்த முதியவரின் புகாரை அடுத்து, நடிகை மற்றும் அவரது நண்பரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வசித்து வரும் 75 வயதாகும் முதியவருக்கு, கொல்லம் பகுதியில் ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டினை வாடகைக்கு கோரி அண்மையில் பெண் ஒருவர் அலைபேசியில் அழைத்துள்ளார். முன்னாள் ராணுவ வீரரான வீட்டின் உரிமையாளர், அழைப்பு விடுத்த பெண்ணிடம் வழிந்தபடி பேசி இருக்கிறார்.

இதனைப் பயன்படுத்தி, ‘ஒரு முறை நேரில் சந்திக்கலாம்’ என அந்தப் பெண் தேனொழுக அழைப்பு விடுத்திருக்கிறார். அதனை நம்பிய முன்னாள் ராணுவ வீரரும், ஆவலாதியாய் பெண் குறிப்பிட்ட இடத்துக்கு சென்றிருக்கிறார். அங்கே உல்லாசமாய் இருக்க விரும்புவது போல, முதியவரின் ஆடைகளை அகற்றி அந்த பெண் ஆயத்தம் செய்திருக்கிறார்.

அப்போது வரை மறைந்திருந்து படம் எடுத்துக்கொண்டிருந்த ஒரு ஆண், அதன் பிறகு முதியவரை நிர்வாணமாக்கி மிரட்டி வீடியோவும் எடுத்துள்ளார். அதன் பிறகு அந்த புகைப்படங்கள், வீடியோ மற்றும் வாட்ஸ் ஆப் வீடியோவில் பெண்ணிடம் வழிந்து பேசியது ஆகியவற்றைக் காட்டி பல லட்சங்களை மிரட்டல் கும்பல் கவர்ந்திருக்கிறது.

இந்த வகையில் சுமார் 11 லட்சம் ரூபாய் கறந்த மிரட்டல் பேர்வழிகள், ரூ.25 லட்சத்துக்கு இலக்கு வைத்து முதியவரை மேலும் நெருக்க ஆரம்பித்தனர். ’அவ்வளவு தொகை என்னிடம் இல்லை’ என முதியவர் கெஞ்சிப் பார்த்தார். நிர்வாண படங்களை இணையத்தில் வெளியிடப் போவதாக அவர்கள் மிரட்டியதை அடுத்து, காவல்துறை உதவியை நாடினார் முதியவர்.

போலீஸார் அளித்த யோசனைப்படி, மிரட்டல் கும்பல் கேட்ட தொகை தயாராக இருக்கிறது என முதியவர் அழைப்பு விடுத்தார். அதனை நம்பி, விரைந்து வந்த மோசடிப் பேர்வழிகளை மறைந்திருந்த போலீஸார் கைது செய்தனர். கைதானவர்களில் நித்ய சசி என்பவர், கேரள தொலைக்காட்சித் தொடர்களில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் என்பதும் தெரிய வந்தது.

தனது நண்பர் பினுவுடன் சேர்ந்து, வயதான மற்றும் பணக்கார சபலிஸ்டுகளாக தேர்ந்தெடுத்து, ஹனி டிராப் வலையில் வீழ்த்தி, லட்சக்கணக்கில் பணம் பறிப்பதை பிரதான தொழிலாக நித்ய சசி நடத்தி வந்ததும் வெளிப்பட்டுள்ளது. இருவரையும் கைது செய்த கேரள போலீஸார், இருவரின் ஹனி டிராப் வலைக்கு வேறு எவரேனும் சிக்கி உள்ளனரா என்றும் விசாரித்து வருகின்றனர்.

x