ஓசூர் ரயில் நிலையத்தில் தவறுதலாக இறங்கிய சிறுமி: மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு


ஓசூர்: ஓசூர் ரயில் நிலையத்தில் தவறுதலாக இறங்கிய சிறுமியை போலீஸார் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ஓசூர் ரயில் நிலைய நடைமேடையில் கடந்த 1-ம் தேதி 5 வயதுடைய சிறுமி, தனியாக அழுது கொண்டு நின்று கொண்டிருந்தார். ரயில்வே போலீஸார் அவரை மீட்டு, விசாரித்தனர். விசாரணையில், தனது தாயாருடன் ரயிலில் வந்தபோது, தவறி இங்கு இறங்கி விட்டதாகக் கூறினார்.

தொடர்ந்து, ஓசூர் அண்ணாமலை நகரில் உள்ள மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லத்தில் சிறுமியைத் தங்க வைத்தனர். விசாரணையில், சிறுமி கர்நாடக மாநிலம் பெங்களூரு புலிகேசி நகரைச் சேர்ந்த சாம்சன்-மேரி தம்பதியின் மகள் பெனிட்டா (5) என்பதும், பெங்களூருவில் இருந்து ஓசூர் அருகே நாகமங்கலத்தில் உள்ள மாதா கோயிலுக்குச் செல்ல ரயிலில் வந்தபோது, ஓசூர் ரயில் நிலையத்தில் சிறுமி தவறுதலாக இறங்கியது தெரிந்தது. இதைய டுத்து, பெற்றோருக்குத் தகவல் அளித்து குழந்தையை அவர்களிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.

கைப்பை ஒப்படைப்பு: இதேபோல, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த லதா என்பவர் கடந்த 31-ம் தேதி நாகர்கோவில்-பெங்களூரு விரைவு ரயிலில் ஓசூருக்கு வந்தபோது, தனது கைப்பை தவறி கீழே விழுந்து விட்டதாகவும், அதில் ரூ.1,000 மற்றும் செல்போன் இருந்ததாக ஓசூர் ரயில்வே போலீஸாரிடம் புகார் தெரிவித்தார்.இதையடுத்து, ரயில்வே போலீஸார் ரயில் நிலையம் அருகே தண்டவாளப் பகுதி தேடிய போது, அங்கு கிடந்த பையை மீட்டு, அவரிடம் ஒப்படைத்தனர்.

x