சென்னை | வயதான பெண் பயணியிடம் ரயிலில் நகை திருட்டு: இரண்டு பெண்கள் கைது


சென்னை: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் வாசுகி (57). இவர் கடந்த மாதம் 5-ம் தேதி சென்னைசைதாப்பேட்டையில் உள்ள தனது மகள் வீட்டுக்கு வந்திருந்தார். பின்னர் கடந்த மாதம் 7-ம் தேதி காலை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் பெண்கள் பெட்டியில் ஏறியபோது, அவரது கழுத்தில் கிடந்த 17 கிராம் தங்க செயின் திருடுபோனது.

இதுகுறித்த புகாரின்பேரில் மாம்பலம் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிந்து, சிசிடிவியில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்நிலையில், சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் 2 பெண்கள் சந்தேகத்துக்கிடமான முறையில் நேற்று முன்தினம் நின்று கொண்டிருந்தனர். ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் ஜெயமணிகண்டன் உள்ளிட்ட போலீஸார் அவர்களை பிடித்து விசாரித்தபோது வாசுகியிடம் நகை திருட்டில் ஈடுபட்டபெண்கள் என்பது தெரியவந்தது.

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் ஒசூர் ரயில் நிலையம் அருகேமாரியம்மன்கோவில் தெருவைச்சேர்ந்த முத்து என்ற ரேகா (33),பேச்சி என்ற கண்மணி (36) ஆகியோர் என்பதும், வயதான பெண் பயணிகளை குறிவைத்துதிருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 11.860 கிராம் தங்க கட்டி கைப்பற்றப்பட்டது.

இதுகுறித்து ரயில்வே போலீஸார் கூறியதாவது: இவர்கள் இருவரும் ரயிலில் பயணிக்கும் வயதான பெண் பயணிகளின் கவனத்தை சிதறடித்து நகை, பணத்தை திருடி வந்துள்ளனர். 7-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம் என்றனர்.

x