கன்னியாகுமரி மாவட்டம், சிற்றாறு பகுதியில் பொதுமக்களையும், ரப்பர் தொழிலாளிகளையும் அச்சுறுத்தி வரும் புலியைப் பிடிக்க வனத்துறையினர் எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சிற்றாறு ரப்பர் கழகக் குடியிருப்பு, மூக்கறைகல் பழங்குடியினர் குடியிருப்புப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே புலி ஒன்று நடமாடி வருகிறது. இப்பகுதியில் ஆடு, மாடு ஆகியவற்றையும் இந்த புலி வேட்டையாடியது. புலியைப் பிடிக்க கண்காணிப்புக் கேமராவும், கூண்டும் அமைக்கப்பட்டுள்ளது
ஆனாலும் கடந்த ஒருவாரமாகக் கூண்டு வைத்தும் புலி சிக்கவில்லை. இதனிடையே அப்பகுதிவாசிகளின் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை தினமும் இரவு அங்குள்ள முத்துமாரியம்மன் கோயில் வளாகத்தில் பாதுகாப்பாக கட்டிப்போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மக்களை அச்சுறுத்தும் புலியைப் பிடிக்க களக்காடு முண்டந்துறை பகுதியில் இருந்து மருத்துவர்கள் குழுவும், தேனியில் இருந்து எலைட் என்னும் படையினரும் வருகை தந்து தேடினர். மாவட்ட வன அலுவலர் இளையராஜா மேற்பார்வையில் இந்தக் குழுவினர் புலியைத் தேடி வருகின்றனர். தலா 15 பேர் வீதம் இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு குழுவிலும் 5 பழங்குடி மக்களும் இடம்பெற்று உள்ளனர்.
புலி இதுவரை சிக்காத நிலையில் சிற்றாறு குடியிருப்பு பகுதியில் உள்ள மக்கள் மாலை 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என வனத்துறையினரே அறிவுறுத்தி இருந்தனர். புலியைப் பிடிக்க இரு கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. எலைட் படை, மயக்க ஊசி, இரு மருத்துவர்கள் குழுவினரும் தயார் நிலையில் நின்று புலியைத் தேடிவருகின்றனர். நேற்று முதலே காட்டுக்குள் ட்ரோன் மூலம் புலியைக் கண்காணித்தனர்.
இன்றும் இரண்டாவது நாளாக ட்ரோன் கேமரா மூலம் புலியைத் தேடி வருகின்றனர். நண்பகல் வரை புலி சிக்கவில்லை. இதுகுறித்து குமரி மாவட்ட வன அலுவலர் இளையராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், “ட்ரோன் கேமரா மூலம் இருநாட்களாக தேடுதல் வேட்டை நடத்தியும் ட்ரோனில் புலி நடமாட்டம் தென்படவில்லை.
வனத்துறையினரின் சப்தத்தை உணர்ந்த புலி காட்டுக்குள் சென்று இருக்கலாம் எனக் கருதுகின்றோம். இதனால் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவை இல்லை. இருந்தும் ஆடுகளை மட்டும் பத்திரமாக வைக்க, பாதுகாக்க அறிவுறுத்தி உள்ளோம்” என்றார்.