4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொன்ற நபரை சாகும் வரை தூக்கிலிட உத்தரபிரதேச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ’அரிதிலும் அரிதான வழக்கு’ என்ற அடிப்படையில் மீரட் போக்சோ நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
35 வயதாகும் முகமது பாஹீம் என்ற நபர் இவ்வாறான மரண தண்டனைக்கு ஆளாகி இருக்கிறார். கடந்த ஏப்ரலில் ஜஹாங்கீர்பாத் நகர் பகுதியில் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை அழைத்து, முகமது பாஹீம் பேசிக் கொண்டிருந்ததை அருகில் உள்ள சிலர் பார்த்துள்ளனர். அதன் பிறகு அந்த சிறுமியை காணவில்லை. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் மேற்கொண்ட விசாரணை, முகமது பாஹீமுக்கு எதிராக திரும்பியது.
அவரது வீட்டை சோதனையிட்ட போலீஸார், கட்டிலுக்கு அடியில் இருந்து 4 வயது சிறுமியின் சடலத்தை கைப்பற்றினர். உடலெங்கும் பற்களால் கடிக்கப்பட்ட நிலையில், சீரழிக்கப்பட்டிருந்த சிறுமியின் சடலமே, நடந்தது என்ன என்பதை விளக்கியது. உத்தரபிரதேசத்தை உலுக்கிய இந்த பலாத்கார கொலை வழக்கு மீரட் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது.
விரைவாக நடைபெற்ற விசாரணைகளின் முடிவில் தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிபதி துருவ்ராஜ், குற்றவாளியை சாகும் வரை தூக்கிலிட உத்தரவிட்டார். அரிதிலும் அரிதான வழக்காக வகைப்படுத்திய நீதிபதி, ”இம்மாதிரியான குற்றங்கள் சட்டத்துக்கு புறம்பானவை மட்டுமல்ல. மனித மற்றும் சமூக நாகரித்தின் கட்டுமானத்தையே உருக்குலைக்கக் கூடியவை. எனவே அதிகபட்ச தண்டனை வழங்கப்படுகிறது” என்று விளக்கி உள்ளார். ஏப்ரலில் நடந்த குற்ற சம்பவத்துக்கு, ஓரிரு மாதங்களில் விரைந்து நீதி வழங்கப்பட்டது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.