தனது சகோதரியை தவறாக பேசியதால் பள்ளி மாணவனை கல்லூரி மாணவன் ஒருவன் கழுத்தை நெறித்துக் கொலைச் செய்து குளத்தில் வீசியுள்ள சம்பவம் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிதம்பரம் அருகே உள்ள தெற்கு பிச்சாவரம் மணல்மேட்டு தெருவைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மகன் மணிகண்டன்( 13) சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 20-ம் தேதி சிதம்பரநாதன் பேட்டை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக அங்குள்ள தனது பாட்டி லலிதாவின் வீட்டிற்கு மணிகண்டன் சென்றுள்ளான்
அப்போது அங்குள்ள மாரியம்மன் கோவில் குளத்தில் மணிகண்டன் பிணமாக மிதந்தான். இது பற்றி அறிந்த அண்ணாமலை நகர் போலீஸார் இறந்து போன மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மணிகண்டனின் பிரேத பரிசோதனை முடிவு வந்த நிலையில், பிரேத பரிசோதனை மணிகண்டனின் கழுத்து நெரிக்கப் பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவனை யாரேனும் கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸாரின் தீவிர விசாரணையில் சிதம்பரம் அருகே உள்ள சிதம்பரநாதன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் மகன் ராகுல்(19) என்பவர் மணிகண்டனைக் கொலைச் செய்தது தெரிய வந்தது.
சிதம்பரத்தில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வரும் ராகுல், அடிக்கடி பாட்டி வீட்டுக்கு வந்த மணிகண்டனுடன் நெருங்கி பழகியுள்ளார். இந்நிலையில் ராகுலின் அக்கா குறித்து மணிகண்டன் வேறு ஒரு நண்பரிடம் தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த ராகுலுக்கு மணிகண்டன் மீது ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் 20-ம் தேதி கோவில் திருவிழாவில் பங்கேற்க மணிகண்டன் வந்திருந்த நிலையில் அன்றைய தினம் இரவு சாமி வீதி உலா முடிந்து கோவில் அருகே படுத்திருந்தான். அப்போது அங்கு சென்ற ராகுல் கழிப்பிடம் செல்லலாம் என கூறி கோவில் குளத்துக்கு மணிகண்டனை அழைத்துச் சென்று, கழுத்தை நெரித்து நீரில் அழுத்தி கொலை செய்துள்ளார்.
இதையடுத்து கல்லூரி மாணவர் ராகுலை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.