நெல்லையில் மாநகராட்சியின் பம்பு அறையில் கை கழுவச் சென்ற ஒன்றாம் வகுப்பு மாணவி மின்சாரம் பாய்ந்து உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை வண்ணார்பேட்டை அம்பேத்கர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி சோனியா. இந்தத் தம்பதிக்கு இருமகன்கள், பேச்சியம்மாள் என்ற சத்யா(6) என்னும் மகளும் இருந்தார். சத்யா அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். சத்யாவின் வீட்டின் முன்பு ஓலை செட் அமைக்கும் பணி நேற்று நடந்தது. நேற்று மாலையில் பள்ளிவிட்டு வந்த சத்யாவும் இதைப் பார்த்து ஆர்வமாகி சாணி பூசினார்.
தொடர்ந்து கை கழுவுவதற்காக அப்பகுதியில் உள்ள மாநகராட்சியின் மோட்டார் பம்பு அறைக்குச் சென்றார். அங்குள்ள பைப் லைனில் மின்கசிவு இருந்துள்ளது. சத்யா கதவைத் திறப்பதற்கு கை வைத்ததும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் சிறுமியின் உறவினர்கள், “மாநகராட்சியின் மோட்டார் பம்பு அறை எப்போதுமே திறந்து தான் கிடக்கும். அங்கு உபகரணங்களும் சேதம் ஆன நிலையிலேயே உள்ளது. இது குறித்து மாநகராட்சிக்குத் தகவல் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. மாநகராட்சி ஊழியர்களின் அலட்சியமே சிறுமியின் உயிரை பறித்து விட்டது” எனக் குற்றம் சாட்டி உள்ளனர்.
மின்சாரம் தாக்கி ஒன்றாம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.