ஆவடி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிசை மாற்றுவாரிய வீடுகள் வாங்கித் தருவதாக 104 பேரிடம் ரூ.88.40 லட்சம் மோசடி செய்தது தொடர்பான வழக்கில் தலைமறைவாக இருந்தவரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
சென்னை, ராமாபுரம், அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் கௌதமன் (35). இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு, ராமாபுரம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன், பூந்தமல்லி - குமணன்சாவடியைச் சேர்ந்த செல்வம், அம்பத்தூர் -கள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த நித்யா, மணலி புதுநகரைச் சேர்ந்த லட்சுமி ஆகியோரின் அறிமுகம் கிடைத்துள்ளது.
அந்த அறிமுகத்தின் பேரில், சுப்பிரமணியன் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகே பனப்பாக்கம் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்றுவாரிய வீடுகள் பெற்று தருவதாகவும், அதற்கு குடிசை மாற்று வாரியத்துக்கு முன்பணமாக ரூ.85 ஆயிரம் செலுத்த வேண்டும் என, கெளதமன் மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்களிடம் கூறியுள்ளனர்.
இதனை நம்பிய கௌதமன் மற்றும் 103 பேர் ரூ.88.40 லட்சம் பணத்தை, சுப்பிரமணியன் உள்ளிட்டோரிடம் அளித்தனர். பிறகு, அவர்கள் 4 பேரும் கெளதமன் உட்பட 104 பேரிடம், அவர்களின் புகைப்படங்கள், கைரேகை மற்றும் கண்விழி அடையாளங்களை பெற்றுக் கொண்டு, வேனில் ஏற்றி பனப்பாக்கம் கிராமத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளை காட்டி, ’இந்த வீடுகள் உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது’ என கூறியுள்ளனர்.
மேலும், அவர்கள் 104 பேருக்கு அரசு முத்திரையுடன் கூடிய போலி ஒப்புகைச் சீட்டு கொடுத்து ஏமாற்றியுள்ளனர். இந்த மோசடி செயல்கள் தொடர்பாக ஏற்கனவே ஆவடி மத்திய குற்றப்பிரிவின் போலி ஆவண தடுப்பு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அவ்விசாரணையில், மோசடி செயல்களை செய்ய, தமிழக அரசின் தலைமை செயலகத்தில் பணிபுரிவதாக கூறி லெட்சுமி உள்ளிட்டோருக்கு உடந்தையாக செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி, இந்திரா நகரை சேர்ந்த பொன்சிங்கம் (61) என்பவர் இருந்தது தெரிய வந்தது.
இந்நிலையில், நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த பொன்சிங்கத்தை ஆவடி மத்திய குற்றப்பிரிவின் போலி ஆவண தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.