நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே டாரஸ் லாரி மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த உண்ணாமலைக்கடை பகுதியில் உள்ள கண்ணாடி கடைக்கு வெளியூரில் இருந்து கண்ணாடி மற்றும் அலுமினிய பொருட்கள் கொண்டு வந்த சரக்கு லாரி ஒன்று இன்று காலை கடையருகில் சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அப்போது அங்கு திருவட்டார் பணிமனையிலிருந்து மார்த்தாண்டத்திற்கு பயணிகளுடன் வந்த அரசுப் பேருந்து எதிர்பாராத விதமாக லாரியின் பின் பக்கத்தில் மோதியது.
இதில் பேருந்தின் ஒரு பக்கம் முழுவதும் உருத் தெரியாத வகையில் நொறுங்கி சேதமடைந்தது. லாரி மீது மோதிய பேருந்து அதே வேகத்தில், சாலையோரத்து மின் கம்பத்திலும் மோதியது. மின் கம்பம் உடையாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பேருந்து விபத்தில் சிக்கியதில் அதில் இருந்து பயணிகள் பயத்தில் கூச்சலிட்டனர். இதில் பேருந்துப் பயணிகள் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பொதுமக்கள் அவர்களை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறிய காயம் ஏற்பட்ட பயணிகள் மார்த்தாண்டம் பகுதியில் தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை பெற்று சென்றனர். இந்த விபத்தால் உண்ணாமலைக்கடை பகுதியில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றிருந்தன. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் போக்குவரத்தை சீர்படுத்தினர். விபத்து குறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.