சிவகாசி அருகே இளைஞர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி இளைஞரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிவகாசி அருகே உள்ள நமஸ்கரித்தான் பட்டியைச் சேர்ந்தவர் செல்வம். இவருக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். இவரது 3வது மகன் பொன்பாண்டி (23). சிவகாசியில் லோடுமேன் வேலை பார்த்து வந்துள்ளார். தீபாவளி பண்டிகையொட்டி வீட்டின் அருகே நேற்று இரவு பட்டாசு வெடித்துக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக காளீஸ்வரி என்ற பெண், மாடுகளை பத்திக் கொண்டு வரும்போது மாடுகள் மிரண்டு ஓடி உள்ளது.
அப்போது பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த பொன்பாண்டியை, காளீஸ்வரி கண்டித்து உள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பொன்பாண்டியை அவரது அண்ணன் சமாதானம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று இரவு பொன்பாண்டி தனது இருசக்கர வாகனத்தில் வீரபாண்டியின் தோட்டத்திற்கு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பவில்லை. இதுபற்றி அந்த பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் செல்வம் அங்கு சென்றுபார்த்தபோது, பொன்பாண்டி அரிவாளால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்துள்ளார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து செல்வம் கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸார், வடமலாபுரம் கார்த்திக், வீரபாண்டி, அசோக் என்ற அய்யாதுரை உள்பட 6 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர். இந்த நிலையில், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சிவகாசி அரசு மருத்துவமனை முன்பு பொன்பாண்டியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் வாசிக்கலாமே...