திருவள்ளூர் அருகே டூ வீலரில் லாரி மோதி இளைஞர் உயிரிழப்பு: உறவினர்கள் சாலை மறியல்


விபத்தில் உயிரிழந்த வினோத்குமார் (அடுத்த படம்) தண்டலம் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது சவுடுமண் லாரி மோதி இளைஞர் உயிரிழந்த சம்பவத்துக்கு எதிராக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே தண்டலம் பகுதியில் இருசக்கர வாகனம் மீது சவுடுமண் லாரி மோதி இளைஞர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் அருகே உள்ள சிட்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார் (35). இவர், சென்னை, அம்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். வினோத்குமார், நாள் தோறும் மோட்டார் சைக்கிளில் செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் சென்று, அங்கிருந்து மின்சார ரயிலில் பணியிடத்துக்குச் செல்வது வழக்கம்.

அந்த வகையில், வினாத்குமார், இன்று காலை பணியிடத்துக்கு செல்வதற்காக சிட்டத்தூரில் இருந்து, மோட்டார் சைக்கிளில் செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது, தண்ணீர்குளம் அடுத்த தண்டலம் பகுதியில் சென்றபோது, பின்னால் வந்த சவடு மண் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், சாலையில் தூக்கிவீசப்பட்ட வினோத்குமார், படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனை அறிந்த தண்டலம் கிராம பொதுமக்கள் லாரியை மடக்கி பிடித்தனர். இருப்பினும் லாரியின் ஓட்டுநர் தப்பிச்சென்றார். இந்நிலையில், வினோத்குமார் உயிரிழந்த தகவல் அறிந்த, அவரின் உறவினர்கள் விபத்து நடந்த இடத்தில் திரண்டு வினோத்குமாரின் வினோத்குமாரின் உடலுடன் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

x