விஷம் கலக்கிய மர்ம நபர்களால் அதிர்ச்சி: 40 லட்ச ரூபாய் இறால்கள் மடிந்த சோகம்!


செத்து மடிந்த இறால்கள்

பூம்புகார் அருகே இறால் குட்டைகளில் மர்ம நபர்கள் விஷம் கலந்ததால் 40 லட்ச ரூபாய் மதிப்பிலான இறால்கள் செத்து மிதந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயம், மீன்பிடித் தொழில் தவிர இறால் பண்ணை தொழிலும் அதிக அளவில் நடைபெறுகிறது. இப்பகுதியில் இருந்து அதிக அளவில் இறால் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.

சீர்காழி அருகே காவிரிப்பூம்பட்டினம் ஊராட்சி பூம்புகார் காவிரி சங்கமத்துறை அருகே 150-க்கும் மேற்பட்ட இறால் குட்டைகள் அமைந்துள்ளன. அங்கு மந்தகரையைச் சேர்ந்த தனமூர்த்தி என்பவருக்குச் சொந்தமான இரண்டு இறால் குட்டைகள் உள்ளன.

இந்த சூழலில் தனமூர்த்தியின் இறால் குட்டையில் நேற்று இறால்கள் இறந்து மிதந்தன. மர்ம நபர்கள் விஷம் கலந்ததால் தான் இறால்கள் இறந்ததாக கூறப்படுகிறது.

இறால் குட்டை

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த தனமூர்த்தி இதுகுறித்து பூம்புகார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் பூம்புகார் காவல் துறையினர் அங்கு சென்று பார்த்தபோது விஷபாட்டில் ஒன்று கிடந்துள்ளது. அதனைக் கைப்பற்றி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த இரண்டு குட்டைகளிலும் விஷம் கலந்ததால் இறந்த இறால்களின் மதிப்பு சுமார் 40 லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது. மேலும் இச்சம்பவம் அருகில் உள்ள மற்ற இறால் பண்ணை உரிமையாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.


x