காங்கேயத்தில் 7 வீடுகளின் பூட்டு உடைப்பு: 25 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு


காங்கேயம்: காங்கேயத்தில் 7 வீடுகளின் பூட்டுகளை உடைத்து, நகைகள் மற்றும் பணம் திருடிய மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

காங்கேயம் - தாராபுரம் சாலையில் பாரதியார் நகர் மற்றும் சக்தி நகர் உள்ளது. இப்பகுதியில் உள்ள அடுத்தடுத்து பூட்டிய வீடுகளில் புகுந்த மர்மநபர்கள் நேற்று இரவு நகை, பணம் உள்ளிட்டவைகளை திருடினர்.

இவர்கள் வெளியூர் சென்றிருந்த நபர்களின் வீடுகளை குறி வைத்து, பூட்டை உடைத்து திருடியதும் தெரியவந்தது. பாரதியார் நகரை சேர்ந்த கண்ணன்(55) என்பவர் வீட்டில் இருந்த பீரோ மற்றும் அறைகளில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் தங்கநகைகளை மர்மநபர்கள் திருடினர். அதேபகுதியைச் சேர்ந்த பிரபாவதி(64) என்பவர் வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளன.

சக்திநகர் பகுதியில் திவ்யா (36) என்பவர் வீட்டின் பூடை்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள், வீட்டின் பீரோவில் ரூ.1 லட்சம் ரொக்கத்தை திருடினர். தொடர்ந்து செல்வி (37), ரவி(45), ராஜேந்திரன்(57) ஆகியோரின் வீட்டு கதவை உடைத்தனர். ஆனால் அங்கு எதுவும் கிடைக்காமல் மர்மநபர்கள் வெளியே வந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காங்கேயம் போலீஸார், அதில் சில மர்ம நபர்களை துரத்தி சென்றனர்.

அவர்கள் திருடுவதற்கு பயன்படுத்திய கடப்பாரையை, போலீஸாரை நோக்கி எரிந்துவிட்டு தப்பினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக்குப்தா நேரில் ஆய்வு செய்தார்.

இச்சம்பவம் அறிந்து காங்கேயம் வந்த கோவை மண்டல டி.ஐ.ஜி. சரவணசுந்தர், திருட்டு சம்பவம் குறித்து கேட்டறிந்து உடனடியாக திருட்டில் ஈடுபட்ட மர்ம கும்பலை பிடிக்க ஆலோசித்தார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் திருட்டு சம்பவம் அரங்கேறியிருப்பது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

எஸ்.ஐ, முதல் டிஎஸ்பி வரை கைத்துப்பாக்கியுடன் ரோந்து பணி: திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொள்ளை, கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், இன்று (செப்.2) இரவு மாவட்டத்தில் உள்ள 24 காவல் நிலையங்களில் சுமார் 300 போலீஸார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், போலீஸார் கைத்துப்பாக்கியுடன் வலம் வந்தனர்.

இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா கூறும்போது, “எஸ்.ஐ., முதல் டிஎஸ்பி வரையிலான போலீஸார் ரோந்து பணியில் ஈடுபடும் போது, கைத்துப்பாக்கியுடன் ஈடுபட வேண்டும். இதற்கான உத்தரவு அனைத்து காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து குற்றங்களை தடுக்கும் வகையில், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.

x