பழநி அருகே தண்ணீர் தொட்டியை இடித்தபோது இளைஞர் உயிரிழப்பு; இருவர் காயம்


பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே ஏரமநாயக்கன்பட்டியில் இன்று மாலையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடிக்கும் போது எதிர்பாராதவிதமாக இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இரண்டு பேர் காயமடைந்தனர்.

பழநி அடுத்த கணக்கன்பட்டி அருகேயுள்ள ஏரமநாக்கன்பட்டி கிராமத்தில் பல ஆண்டுகளாக பயன்பாட்டின்றி இருந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் கரூரைச் சேர்ந்த பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இன்று மாலை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் உள் பகுதியில் பணியாளர்கள் இடித்து கொண்டிருந்த போது திடீரென தொட்டியின் இடிபாடுகள் பணியாளர்கள் மீது சரிந்து விழுந்தது.

இதில் இடிபாடுகளில் சிக்கியவர்களை, பழநி தீயணைப்பு நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமையிலான வீரர்கள் மீட்டனர். அதில், கரூரைச் சேர்ந்த இளையராஜா (32) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கரூர் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் (32), வடிவேல் (46) ஆகியோர் காயமடைந்தனர். அவர்களை பழநி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து ஆயக்குடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

x