உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு பாகிஸ்தானில் இருந்து பகிரங்க கொலை மிரட்டல்!


கர்நாடக உயர் நீதிமன்றம்

கர்நாடக உயர் நீதிமன்றத்தின் 6 நீதிபதிகளுக்கு பாகிஸ்தானில் இருந்து, பகிரங்க கொலை மிரட்டல் வந்தது தொடர்பாக மாநில போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கர்நாடக உயர் நீதிமன்றத்தின் பிஆர்ஓ பொறுப்பில் இருப்பவர் கே.முரளிதரன். இவருக்கு அண்மையில் முன்பின் அறிந்திராத தொடர்பு எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. பின்னர் அவரது அலுவல் பயன்பாட்டுக்கான அலைபேசி எண்ணுக்கு, வாட்ஸ் அப் வாயிலாகவும் அழைப்புகள் மற்றும் தகவல்கள் வந்தன.

அவை அனைத்தின் சாராம்ச செய்தியாக, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் 6 நீதிபதிகளுக்கு எதிரான பகிரங்க கொலை மிரட்டல் இருந்தது. இது தொடர்பாக பிஆர்ஓ முரளிதரன் காவல்துறையில் புகார் அளித்தார். போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், மேற்படி அழைப்புகள் மற்றும் வாட்ஸ் அப் தகவல்கள் அனைத்தும் பாகிஸ்தானில் இருந்து வந்திருப்பது உறுதியானது.

வாட்ஸ் தகவல்கள் இந்தி, உருது மற்றும் ஆங்கிலத்தில் அமைந்திருந்தன. கொலை மிரட்டல்களின் மத்தியில், பாகிஸ்தானில் செயல்படும் ஏபிஎல் வங்கிக்கு ரூ.50 லட்சம் அனுப்புமாறு, வங்கி கணக்கு எண்ணுடன் ஒரு மிரட்டல் தகவலும் வந்திருந்தது. இது தவிர்த்து, கொலைகளை நிகழ்த்தும் எங்களது இந்திய ‘ஷூட்டர்கள்’ இவர்கள்தான் என சில அலைபேசி எண்களும் ஒரு தகவலில் இடம்பெற்றிருந்தது.

ஜூலை 12 அன்று பெறப்பட்ட இந்த மிரட்டல் தகவல்கள் தொடர்பாக வழக்கு பதிவு கர்நாடக போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கர்நாடக நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான மிரட்டல்கள், அவை பாகிஸ்தானில் இருந்து விடுக்கப்பட்டது உள்ளிட்டவற்றின் பின்னணி குறித்தும் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x