மினி லாரியை வழிமறித்து ஓட்டுநர் வெட்டிப் படுகொலை - விருதுநகரில் பயங்கரம்


விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மினி லாரி ஓட்டுநர் ஒருவர் இன்று மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருமாள்தேவன்பட்டியைச் சேர்ந்தவர் காளிகுமார் (33). மினி லாரி ஓட்டுநரான இவர் இன்று தனது மினி லாரியில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் குழாய் பதிப்பதற்கான உதிரிப் பாகங்களை ஏற்றிக்கொண்டு திருச்சுழி நோக்கி வந்து கொண்டிருந்தார். திருச்சுழி - ராமேஸ்வரம் சாலையில் கேத்தநாயக்கன்பட்டி விலக்கு அருகே வந்த போது, 2 பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் 5 பேர் மினி லாரியை வழிமறித்து நிறுத்தி காளிகுமாரை சரமாரியாத் தாக்கினர்.

பின்னர், காளிகுமாரை கீழே இறக்கி அரிவாளால் வெட்டிவிட்டு அந்தக் கும்பல் பைக்கில் தப்பிச்சென்றது. இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் திருச்சுழி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த காளிகுமாரை மீட்டு திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்படும் வழியில் காளிகுமார் உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடல் பிரோதப் பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மினி லாரி ஓட்டுநர் காளிகுமார் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என்பது குறித்தும், கொலையாளிகள் யார் என்பது குறித்தும் திருச்சுழி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x