நள்ளிரவில் பூட்டிய வீட்டை உடைத்து உள்ளே நுழைந்த கரடி... பயத்தில் அலறும் பொதுமக்கள்!


குன்னூரில் பூட்டிய வீட்டை உடைத்து உள்ளே நுழைந்த கரடி உணவுப் பொருட்களை சேதப்படுத்தி விட்டு சென்ற சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் போகித் தெரு பகுதியில் வசிப்பவர் ராமநாதன். இவர், தனது வீட்டைப் பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்கு சென்று இருந்த நிலையில், இரவு அந்த வழியாக உலா வந்த கரடி, பூட்டிய வீட்டின் கதவை உடைத்து வீட்டின் உள்ளே நுழைந்தது.

வீட்டில் இருந்த அரிசி, சர்க்கரை போன்ற பொருட்களை தலைகீழாகக் கவிழ்த்தி சேதப்படுத்தியது. கரடி அவற்றைச் சாப்பிட்டது போலவும் இல்லை. வீட்டில் யாரும் இல்லாததால் பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. அடிக்கடி வெலிங்டன் பகுதிக்கு கரடிகள் வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மேலும் இதே பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, கரடி ஒன்று மளிகை கடையின் கதவு, ரேஷன் கடை கதவு ஆகியவற்றை உடைத்ததும் குறிப்பிடத்தக்கது. அடிக்கடி இப்பகுதியில் கரடி நடமாட்டம் இருந்து வருவதால் இந்த பகுதி மக்கள் கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்று வனத்துறைக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

x